கடந்த 1962-ஆம் ஆண்டில் சீனாவுடன் போர் நடைபெற்ற போது, அமெரிக்காவிடம் உதவி கேட்டு அப்போதைய அதிபர் ஜான் கென்னடிக்கு, இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு கடிதம் எழுதினார் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது.
மூன்றாம் உலக நாடுகளின் தலைவராக நேரு உருவெடுப்பதைத் தடுப்பதற்காகவே, அப்போதைய சீன அதிபர் மாசே துங், இந்தியா மீது போர் தொடுத்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ அமைப்பின் முன்னாள் அதிகாரி புரூஸ் ரிடல் என்பவர் எழுதியுள்ள புத்தகத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
சீன அதிபர் மாசே துங்கின் இலக்கு நேருதான். ஆனால், இந்தியா தோல்வியடைந்தால் அது மாசே துங்கின் மற்ற இரண்டு எதிரிகளான குருஷேவுக்கும் (சோவியத் யூனியன் அதிபர்), கென்னடிக்கும் (அமெரிக்க அதிபர்) கூட பின்னடைவுதான். இந்தியா தனது பகுதிகளை வேகமாக இழந்து வந்தது. அத்துடன் உயிர்ச் சேதமும் அதிகமாக இருந்தது.
அந்தச் சமயத்தில், கென்னடிக்கு நேரு எழுதிய கடிதத்தில், “சீனாவின் முற்றுகையை எதிர்கொள்ள விமானப் படை வீரர்கள், போர் விமானங்கள், ரேடார் கருவிகள் உள்ளிட்டவை இந்தியாவுக்கு தேவைப்படுகின்றன.
அமெரிக்கா அளிக்கும் ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு எதிராகப் பயன்படுத்த மாட்டோம்’ எனவும் நேரு உறுதியளித்திருந்தார். நேருவின் அந்தக் கடிதத்தை அமெரிக்காவுக்கான அப்போதைய இந்தியத் தூதர், 1962-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதியன்று கென்னடியிடம் வழங்கினார் என்று அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
-http://www.dinamani.com