உலகம் முழுவதும் உள்ள பார்வையற்றவர்கள் எண்ணிக்கையில் ஐந்தில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்று தமிழக ஆளுநர் கே.ரோசய்யா தெரிவித்தார்.
ராஜன் கண் மருத்துவமனையின் 20-ஆவது ஆண்டு விழா சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆளுநர் ரோசய்யா பேசியதாவது: உலக அளவில் இந்தியாவில்தான் பார்வையற்றோர் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர். பார்வையற்றவர்களில் 5-இல் ஒருவர் இந்தியரே. 50 முதல் 60 சதவீத பார்வை இழப்பு கண் புரை நோயாலும், 10 சதவீதம் கிட்டப்பார்வை, தூரப்பார்வை பிரச்னைகளினாலும், 7 சதவீதம் சர்க்கரை நோயாளிகளுக்கான பார்வை குறைபாட்டாலும், 3 சதவீதம் கண்களில் காயம் ஏற்படுவதாலும் ஏற்படுகிறது.
2020-ஆம் ஆண்டில் இந்தியாவில் சர்க்கரை நோய் தொடர்பான பார்வை குறைபாடுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே கண் மருத்துவமனைகள் கண்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை பள்ளி மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
ராஜன் கண் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மோகன் ராஜன், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் அமர் அகர்வால் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
-http://www.dinamani.com