மூணாறு தமிழ்ப் பெண் தோட்ட தொழிலாளர்கள் கேட்ட ஊதியம் ரூ500- கிடைத்தது ரூ301… மீண்டும் போராட்டம்!

munnar-teaதிருவனந்தபுரம்: கேரளாவில் மூணாறு கண்ணன்தேவன் நிறுவன தேயிலை தோட்டத்தில் தமிழ்பெண் தொழிலாளர்கள் நடத்திய 2 வார கால போராட்டத்தின் முடிவில் சொற்ப கூலி உயர்வு மட்டுமே கிடைத்துள்ளது. தினக்கூலி ரூ500 வழங்கக் கோரி போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் ரூ301ஆக மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் போராடும் நிலைக்கு தமிழ்ப் பெண் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கேரளாவில் தேயிலை, ரப்பர் மற்றும் ஏலக்காய் தோட்ட தொழிலாளர்களுக்கு தினக் கூலியாக ரூ232, ரூ317 மற்றும் ரூ267 என மிகவும் அடிமாட்டு சொற்ப கூலியே வழங்கப்பட்டு வருகிறது. இந்த தோட்டத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்காக பல்வேறு தொழிற்சங்கள் இருந்தபோதும் நிறுவனங்கள் சொல்வதைத்தான் இவை பின்பற்றி தொழிலாளர்கள் மீது திணித்து வந்தன.

இந்த கொடுமைக்கு முடிவுகட்ட மூணாறு கண்ணன்தேவன் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றிய தமிழ்ப் பெண்கள் ஒன்று திரண்டனர். பெண்கள் ஒற்றுமை என்ற பெயரில் புதிய சங்கத்தை தொடங்கி மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதனால் அதிகாரப்பூர்வமான தொழிற்சங்கங்கள் அலறத் தொடங்கின. தமிழ்ப் பெண்களின் இந்தப் போராட்டம் கேரளாவை கதிகலங்க வைத்தது.

தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ500 ஆகவும் போனஸ் 20% வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 2 வாரகாலம் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை இந்த பெண்கள் ஒற்றுமை சங்கம் நடத்தி வந்தது. சாலை மறியல், முழு அடைப்புப் போராட்டங்களும் நடத்தப்பட்டன. இதனால் கேரளா அரசு இதில் தலையிட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தது.

ஆனால் மிகவும் ஆணவமாக ரூ23தான் கூலியை உயர்த்தித் தர முடியும் என்று கண்ணன்தேவன் உள்ளிட்ட நிறுவனங்கள் தெரிவித்தன. இதனால் தோட்டத் தொழிலாளர்கள் கொந்தளித்தனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் இறுதிகட்டமாக திருவனந்தபுரத்தில் புதன்கிழமையன்று கேரளா தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிபு பேபி ஜான் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வுக்கு தற்காலிக ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் உம்மன்சாண்டி ஊதியத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். இதன்படி தேயிலை தோட்ட தொழிலாளர்களின் ஊதியம் 232 ரூபாயிலிருந்து 301 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு 317 ரூபாயிலிருந்து 381 ரூபாயாகவும், ஏலக்காய் தோட்ட தொழிலாளர்களுக்கு 267 ரூபாயிலிருந்து 330 ரூபாயாகவும் ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தங்களது கோரிக்கையான தினக்கூலியை ரூ500 ஆக உயர்த்த வேண்டும் என்பதில் மூணாறு பெண்கள் ஒற்றுமை சங்கம் உறுதியாக உள்ளது. கேரளாவில் அடுத்த மாதம் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்த பின்னர் தங்களது போராட்டம் மீண்டும் தொடரும் என்று பெண்கள் ஒற்றுமை சங்கத்தின் தலைவர் லிஸி தெரிவித்துள்ளார்.

tamil.oneindia.com

TAGS: