கங்கை நதியில் வாழும் டால்பின்களின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு அண்மையில் நடந்து முடிந்தது. அந்தக் கணக்கெடுப்பில் கங்கையில் இப்போது 1,263 டால்பின்கள் உள்ளதாகத் தெரியவந்தது.
இந்தக் கணக்கெடுப்பு 3,350 கி.மீ. தொலைவுக்கு நடத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சுற்றுச் சூழல் மாசுபடுதல் காரணமாக ஆண்டுக்கு 130 முதல் 160 டால்பின்கள் இறப்பதாகவும் கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன்பு 6 ஆயிரம் டால்பின்கள் கங்கையில் இருந்துள்ளது. இப்போது, இந்த எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக உலக வனவிலங்கு நிதியம் (WWF INDIA)கவலை தெரிவித்துள்ளது.
கங்கை நதியில் உள்ள டால்பின்களின் எண்ணிக்கை குறித்து முதல் முறையாக கணக்கெடுப்பு நடத்த மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் அண்மையில் உத்தரவிட்டது.
மேலும் நம் நாட்டின் கடல்வாழ் உயிரினங்களில் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டிருப்பது டால்பின்.
உலகம் முழுவதும் 41 வகையான டால்பின்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. இதில் 37 வகைகள் கடல்வாழ் டால்பின்களாக உள்ளன. இவற்றை ஆய்வு செய்த கொச்சி தேசிய கடல் வாழ் மீன்வள ஆராய்ச்சி மையம், 25 வகை டால்பின்கள் நம் நாட்டின் கடலோரங்களில் இருப்பதாக பதிவு செய்துள்ளது. மீதம் உள்ளவற்றில் மூன்று மட்டும் ஓடும் ஆறுகளில் வாழும் வகையைச் சேர்ந்தவை. இவை தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் நதி, பாகிஸ்தானின் சிந்து மற்றும் இந்தியாவின் கங்கையில் வாழ்கின்றன. மேலும், கங்கையில் வாழும் டால்பின்களுக்கு பார்வை கிடையாது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
டால்பின்கள் நதிகளில் வாழ்ந்து வருவது 19 ஆம் நூற்றாண்டில்தான் உயிரியல் ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்தது. அதன் பிறகு இந்த டால்பின்கள் தனி இனமாகவே கருதப்பட்டு வந்தது. 1970 களில் இந்த டால்பின்கள் பற்றி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, கங்கை நதியில் வாழ்பவையும், சிந்து நதியில் வாழ்பவையும் ஒரே இனம் இல்லை என்று தகவல் உறுதியானது. அதன் பிறகு இரண்டு தனித்தனி இனம் என்றும், பல ஆயிரம் வருடங்களில் இவ்விரு இனங்களுக்கு இடையே கலப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிந்தது.
கடல் வாழ் டால்பின்களைப் போல நீண்ட மூக்கைக் கொண்டிருந்தாலும் இவற்றின் கண்பார்வை கடல் டால்பின்களைப் போல கூர்மையானதல்ல. ஆண் டால்பின்கள் 2 முதல் 2.2 மீட்டர் அளவுக்கும், பெண் டால்பின்கள் 2.4 முதல் 2.6 மீட்டர் அளவுக்கும் வளரக் கூடியவை. இவை டிசம்பர், ஜனவரி மற்றும் மார்ச் முதல் மே மாதம் வரையிலும் இனப்பெருக்கம் செய்து குட்டி போடும்.
அழிவுக்கு காரணம்: கங்கை நதி டால்பின்களின் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளாக குறைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதற்கு முக்கியக் காரணம் நதி மாசுபடுவதாகும். தொழிற்சாலையில் இருந்து வரும் கழிவுகள், விவசாய பூச்சிகொல்லிகள் போன்ற காரணங்களால் கங்கை நதி நீர் கடுமையாக மாசுபட்டுள்ளது. அதனால் டால்பின்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகின்றது.
இது தவிர, மீன் பிடிக்கும் வலைகளின் மூலமாகவும் இவற்றுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுகின்றது. இதுமட்டுமல்லாமல் எண்ணற்ற அணைகள் கட்டப்படுவதால் இவற்றின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
-http://www.dinamani.com
கங்கை யில் பிணத்தை போடுவதை முதலில் நிறுத்துங்கள் எல்லாம் சரியாகி விடும்