நியூயார்க்: அமைதிப் படையை அனுப்பிய வகையில், இந்தியாவுக்கு, ஐ.நா., சபை, 561 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது; அதே சமயம், ஐ.நா.,விற்கு தர வேண்டிய தொகையை, இந்தியா நிலுவையின்றி செலுத்தி விட்டது.
நியூயார்க்கில் நேற்று முன்தினம், ஐ.நா., பொதுச் சபையின் நிர்வாகம் மற்றும் நிதிநிலை குழு கூட்டம் நடைபெற்றது. இதில், ஐ.நா., நிர்வாகத் துறை சார்நிலை பொதுச்செயலர், யுகியோ டகாசு தாக்கல் செய்த அறிக்கை விவரம்:ஐ.நா., சபையின் நிதியாதாரம் நன்றாக உள்ள போதிலும், ரொக்க கையிருப்பு குறைவாக உள்ளது. இதனால், உறுப்பு நாடுகள், நிலுவையை முழுவதுமாக தர வேண்டும். அக்., 2 நிலவரப்படி, ஐ.நா., உறுப்பு நாடு என்ற வகையில், இந்தியா செலுத்த வேண்டிய தொகையை, முழுவதுமாக வழங்கி விட்டது. ஆனால், மற்ற உறுப்பு நாடுகள், 6,930 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளன. இது, 2014ல், 105 கோடி ரூபாயாக இருந்தது.அதே சமயம், ஐ.நா., சபைக்கு அமைதிப்படை, போலீஸ், பாதுகாப்பு சாதனங்கள் ஆகியவற்றை வழங்கிய வகையில், இந்தியாவுக்கு, 561 கோடி ரூபாய் தர வேண்டும். அமைதிப் படை பிரிவில், அக்., 2 நிலவரப்படி, கையிருப்பையும் சேர்த்து, 28,380 கோடி ரூபாய் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.நா., சபை பாக்கி
பாகிஸ்தான் – 640
எத்தியோப்பியா – 574
இந்தியா – 561
வங்கதேசம் – 554
ருவாண்டா – 363
நேபாளம் – 290
ஐ.நா., சபைக்கு பாக்கி
அமெரிக்கா – 5,365
பிரேசில் – 818
வெனிசுலா – 231
(ரூ.கோடிகளில்)
இந்தியா முதலிடம்:
ஐ.நா., அமைதிப்படை நடவடிக்கைகளுக்கு, இந்தியா, 1.85 லட்சம் ராணுவத்தினரை அனுப்பியுள்ளது. ஐ.நா.,வின், 69 அமைதிப்படை முகாம்களில், 48ல், இந்திய வீரர்கள் உள்ளனர். ஐ.நா., உறுப்பு நாடுகளில், இந்தியா தான், அதிக அளவில், ராணுவத்தினரை அமைதிப் படைக்கு அனுப்பியுள்ளது.
-http://www.dinamalar.com