தமிழகத்தை ஒட்டியுள்ள கேரள வனப் பகுதியில் அந்த மாநில போலீஸாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே சனிக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
தமிழகத்தை ஒட்டியுள்ள கேரள எல்லையான அகழி காவல் எல்லைக்கு உள்பட்ட மல்லீஸ்வரன் மலை உள்ளிட்ட வனப் பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக அந்த மாநில போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதிகளில் கேரள போலீஸார், சிறப்புப் பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, வனப் பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள், போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதைத் தொடர்ந்து, போலீஸார், பாதுகாப்புப் படையினர் திருப்பித் தாக்கினர். இதில், மாவோயிஸ்டுகள் சிலர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. போலீஸார் தரப்பில் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, வனப் பகுதிக்குள் இரண்டு குழுக்களாக மாவோயிஸ்டுகள் பிரிந்து தப்பிச் சென்றதாகத் கூறப்படுகிறது.
தமிழக எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு: மாவோயிஸ்டுகளின் தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக கேரளத்தை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி எல்லைகளில் போலீஸார், ஆயுதப்படை போலீஸார், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர், ஊர்க் காவல் படையினர் என 600-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மேற்கு மண்டல ஐ.ஜி. கே.சங்கர் கூறியதாவது:
மாவோயிஸ்ட் குறித்த தகவல் கிடைத்தவுடனே கோவை, நீலகிரி கேரள எல்லையோரக் காவல் நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாலக்காடு பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது முதலே கோவை, நீலகிரி வனப் பகுதியில் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் கூறுகையில், எல்லையோரப் பகுதிகளில் 7 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் தலைமையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சிறப்புத் தனிப் படையினர் வனப் பகுதி, அதையொட்டியுள்ள கிராமங்களில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
-http://www.dinamani.com