காவல்துறையை தில்லி அரசிடம் ஒப்படையுங்கள்:பிரதமருக்கு கேஜரிவால் வலியுறுத்தல்

“காவல்துறையை தில்லி அரசிடம் ஒப்படையுங்கள்’ என்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளார்.

தலைநகர் தில்லியில் உள்ள நாங்லோயி, ஆனந்த் விஹார் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு இரு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சுட்டுரையில் தான் வெளியிட்ட பதிவில் கேஜரிவால் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேற்கு தில்லியில் உள்ள நாங்லோயி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென மின்தடை ஏற்பட்டது. அப்போது வீட்டுக்கு வெளியே இருந்த இரண்டரை வயது சிறுமியை, மோட்டார் சைக்களில் வந்த இருவர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். இதேபோல, கிழக்கு தில்லியில் உள்ள ஆனந்த் விஹார் பகுதியில் ஐந்து வயது சிறுமியை, அவருடைய குடும்பத்துக்கு அறிமுகமான மூவர், பாலியல் பலாத்காரம் செய்து, வீட்டுக்கு அருகே வீசிச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக பிரகாஷ், ரேவதி, சீதாராம் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக பிரதமருக்கும், துணைநிலை ஆளுநருக்கும் கேஜரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து சுட்டுரையில் அவர் கூறியுள்ளதாவது:

சிறுமிகள் மீதான பாலியல் பலாத்கார சம்பவங்கள் அவமானத்தை ஏற்படுத்துவதுடன், கவலையையும் அளிக்கின்றன. பாதுகாப்பு அளிப்பதில் தில்லி காவல் துறை முழுமையாகத் தோல்விடைந்து விட்டது. இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், துணைநிலை ஆளுநரும் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள்? நீங்கள் செயலாற்றுங்கள் அல்லது எங்களை செயலாற்ற விடுங்கள். தில்லி காவல் துறையை தில்லி அரசின் கட்டுப்பாட்டில் ஓராண்டு காலத்துக்கு தாருங்கள். அதன் பிறகும் சூழல் மேம்படாவிட்டால் திருப்பி எடுத்துக் கொள்ளுங்கள் என்று கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

-http://www.dinamani.com

TAGS: