பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க மத்திய அரசுக்கு கெஜிரிவால் யோசனை

kejriwal டெல்லி: பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆயுள், மற்றும் மரண தண்டனை வழங்க வழி செய்ய மத்திய அரசை வலியுறுத்த இருப்பதாக டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் சமீப காலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல்துறை இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருப்பதாகவும் கெஜிரிவால் குற்றஞ்சாட்டி இருந்தார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கெஜிரிவால் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்நிலையில், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து இன்று காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ”டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறையின் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை.

தலைநகர் டெல்லியில் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் டெல்லி அமைச்சர்கள் தலைமையில் ஒரு வாரத்திற்குள் ஒரு குழு அமைக்கப்படும். இந்தக் குழுவினர் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக 15 நாட்களுக்குள் தங்களது பரிந்துரையை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர், மேலும், பெண்கள் பலாத்காரம் தொடர்பான வழக்கை முடிவுக்கு கொண்டு வர ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும்.

பெண்கள் தொடர்பான குற்றத்தை விசாரிக்க பிரத்யேக காவல் நிலையம் அமைக்க வேண்டும். ‘தாமதிக்கப்பட்ட தீர்ப்பு மறுக்கப்பட்ட தீர்ப்பாகும்’, எனவே விரைவான விசாரணை மேற்கொள்ள நடவைக்கைகள் எடுக்கப்படும். இதற்காக டெல்லி மாநில அரசு நிதி ஒதுக்க தயாராக உள்ளது என்றார்.

மேலும், சிறார் குற்றவாளிகளின் வயதை 18-ல் இருந்து 15-ஆக குறைக்க வேண்டும் எனவும் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆயுள் மற்றும் மரணத் தண்டனை வழங்க வழிவகை செய்ய மத்திய அரசை வலியுறுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

http://tamil.oneindia.com

TAGS: