உலக அளவில், வளரும் நாடுகளின் பொருளாதாரம் பலவீனமாகியுள்ள நிலையிலும், உரிய சீர்திருத்த நடவடிக்கைகளின் மூலம் தனது பொருளாதாரத்தை பலமான நிலையில் இந்தியா வைத்திருக்கிறது என்று அமெரிக்கா பாராட்டியுள்ளது.
இருப்பினும், உலகப் பொருளாதார வளர்ச்சியை வழிநடத்திச் செல்லும் முன்னோடியாக இந்தியாவால் உருவெடுக்க முடியவில்லை என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க நிதித்துறை சார்பில் வெளியிடப்பட்ட அரையாண்டு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
வளரும் நாடுகளின் பொருளாதார நிலைமை பலவீனமான நிலையில் உள்ளது. இதன் தாக்கம் சர்வதேச பொருளாதாரச் சூழலிலும் எதிரொலிக்கிறது. சீனாவில் உள்நாட்டு முதலீடு குறைந்துள்ளதுடன், இறக்குமதிப் பொருள்களுக்கு அந்நாட்டில் தேவை அதிகரித்துள்ளதால் பிற நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இதில் மகிழ்ச்சியான செய்தி என்னவெனில், புதிய சீர்திருத்த நடவடிக்கைகளின் மூலம் தனது பொருளாதார வளர்ச்சியை இந்தியா பலமான நிலையில் வைத்துள்ளது. அதேவேளையில், இந்தியா மிகப் பெரிய இறக்குமதி நாடாகவும் இருக்கிறது. இருப்பினும், சர்வதேச பொருளாதாரத்தை வழிநடத்திச் செல்லும் முன்னோடியாக இந்தியாவால் உருவெடுக்க முடியவில்லை.
ரஷியாவுக்கு பின்னடைவு: பொருளாதார விவகாரங்களில் எடுக்கப்பட்ட குழப்பமான முடிவுகள், கச்சா எண்ணெய் விலை குறைவு, சர்வதேசப் பொருளாதாரத் தடைகள் ஆகியவற்றின் விளைவாக பொருளாதார வளர்ச்சியில் ரஷியா போராட்ட நிலையில் இருக்கிறது.
ஆசியாவுக்கு பலன்: கச்சா எண்ணெய் விலை குறிப்பிட்ட அளவுக்கு குறைந்ததால் சர்வதேச அளவில் பாதிப்பு ஏற்பட்டது. அதேவேளையில், கச்சா எண்ணெய் விலைக் குறைவால் அதிகம் பலனடைந்தது ஆசியாதான். அவ்வாறு பலனடைந்த நாடுகளில் ஜப்பான் முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும், கொரியா மூன்றாம் இடத்திலும் உள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-http://www.dinamani.com