டெல்லி: ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்புக்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிலும் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள்தான் அதிகம் மரணித்துள்ளதாக அந்த அறிக்கையில் அதிர்ச்சிகரமான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண், பெண் விகிதம் குறித்து உலகின் பெண்கள்-2015 என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் சபை ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, மேற்கு ஆசியா ஆகியவற்றில் பெண்களை விட ஆண்கள் அதிகளவில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
அதாவது, கிழக்கு ஆசியாவில் 50.5 மில்லியன் ஆண்களும், தெற்கு ஆசியாவில் 49.5 மில்லியன் ஆண்களும், மேற்கு ஆசியாவில் 12.1 மில்லியன் ஆண்களும் உள்ளனர். உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில், 1990க்குப் பிறகு குழந்தைகள் இறப்பு விகிதம் பாதிக்குமேல் குறைந்துள்ளது. அதேசமயம் 2013ஆம் ஆண்டில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் 1990ல் 3.33 மில்லியனாக இருந்த குழந்தைகள் இறப்பு, 2013ம் ஆண்டு 1.34 மில்லியனாக குறைந்துள்ளது. உலக அளவில் 12.7 மில்லியனில் இருந்து 6.3 மில்லியனாக குறைந்திருக்கிறது. கிழக்கு ஆசியாவில் சீனாவில் மட்டும் 20 மில்லியன் ஆண்களும், தெற்கு ஆசியாவில் இந்தியாவில் மட்டும் 43 மில்லியன் ஆண்களும் உள்ளனர். அதிக மக்கள்தொகையை கொண்ட நாடுகளான சீனா, இந்தியா ஆகிய நாடுகள் தான் உலகில் ஆண்கள் விகிதாச்சாரத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் 100 பெண் குழந்தைகளுக்கு 93 ஆண் குழந்தைகள் என்று உள்ளது. 100 குழந்தைகளுக்குள் அதிக பெண் குழந்தைகள் இந்தியாவில் தான் இறக்கின்றன.
பாலினம் சார்ந்த கருக்கலைப்பு சட்டவிரோதமானது என்று 1996-ம் ஆண்டு சட்டம் வந்ததில் இருந்து ஆண்-பெண் விகிதத்தில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்று பெண்களை விட ஆண்கள் அதிகமாக இருப்பதற்கு இந்தியாவில் பொதுவாக ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே காரணம் என்று தெரியவந்துள்ளது.
குழந்தைகள் திருமணத்தை பொறுத்த வரை தெற்கு ஆசியா, ஆப்பிரிக்கா பகுதிகளில் சாதாரணமாக காணப்படுகிறது. உலகில் 3-ல் ஒரு பங்கு குழந்தை திருமணம் இந்தியாவில் நடைபெறுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் 1995ம் ஆண்டில் இருந்து 2013ம் ஆண்டுக்குள் பெண்களை கட்டாயப்படுத்தி வேலையில் ஈடுபடுத்துவது 35 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக குறைந்து உள்ளது. அதேபோல், சீனாவில் 72 சதவீதத்தில் இருந்து 64 சதவீதமாக குறைந்துள்ளது.
2012ம் ஆண்டிலும் ஐந்து வயதுக்குள்ளாகவே இறக்கும் குழந்தைகளின் இறப்பு விகிதம் இந்தியாவில்தான் அதிகமாக உள்ளது. இவற்றின் எண்ணிக்கை 14 கோடியாக உள்ளது.
ஆண்-பெண் குழந்தை பிறப்பு விகிதாசாரத்தில் பக்கத்து நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவின் நிலைதான் மோசமாக உள்ளதாக யுனிசெப் சர்வேயில் தெரியவந்துள்ளது. பூட்டான் நாட்டில் ஆயிரம் ஆண்களுக்கு 987 பெண்கள் என்ற எண்ணிக்கையில் ஆண்-பெண் விகிதாசாரம் உள்ளது. பாகிஸ்தானில் இது 985 ஆக உள்ளது. ஆனால் இந்தியாவில் 924 என்ற மோசமான நிலை உள்ளது.
தெற்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள 8 நாடுகளில் இந்தியாவின் நிலைதான் மிகவும் மோசம். இந்தியாவில் வசதியான குடும்பங்களில் ஆண்-பெண் குழந்தை பிறப்பு விகிதாசாரம் படுமோசமாக உள்ளது. ஏழ்மையானவர்களின் குடும்பங்களில் அவ்வளவாக வித்தியாசம் இல்லை என்று யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது