இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அமைதித் தூதராகச் செயல்பட, பெண் கல்விக்கு உரக்க குரல் கொடுத்து வருபவரும், பயங்கரவாதத்துக்கு எதிரான தனது போராட்டத்துக்காக நோபல் பரிசு பெற்றவருமான மலாலாவுக்கு மத்திய அரசு அழைப்பு விடுக்க வேண்டும் என்று சிவசேனைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அந்தக் கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரௌத், மும்பையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசியதாவது:
பயங்கரவாதத்துக்கு எதிரான செயல்பாடுகளில், பாகிஸ்தானைச் சேர்ந்த குர்ஷித் கசூரி போன்ற அரசியல்வாதிகளுக்கும், மலாலாவுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. குர்ஷித் கசூரி போன்றவர்கள், இந்தியாவுக்கு எதிரான மறைமுகப் போரில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளித்துக் கொண்டு, தாங்கள் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நாடகமாடுகின்றனர்.
ஆனால், மலாலா, பாகிஸ்தான் மண்ணிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுக்க உண்மையிலேயே உரக்க குரல் கொடுத்தவர்; போராடியவர். இதன் எதிர்விளைவாக, பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆளாகி, அநேகமாக தனது வாழ்வையே இழந்தவர்.
பாகிஸ்தானில் பயங்கரவாதத்துக்கு எதிரான அரசியல்வாதிகளின் நாடகங்கள் தொடரலாம். இத்தகைய சூழலில், அமைதிக்காக ரத்தம் சிந்திய மலாலா போன்ற சிலரால்தான் பாகிஸ்தான் மண்ணிலிருந்து பயங்கரவாதத்தை முற்றிலும் அகற்ற முடியும். உண்மையான அமைதித் தூதரான மலாலாவிடமிருந்து ஒட்டுமொத்த உலகமே நிறைய பாடம் கற்க வேண்டியுள்ளது.
இதனைக் கருத்தில்கொண்டு, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அமைதித் தூதராகச் செயல்பட மத்திய அரசு மலாலாவுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். அப்போதுதான் பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிக்கும் முஸ்லிம்களுக்கும், அந்த நாட்டின் பயங்கரவாதச் செயல்கள் குறித்த உண்மை விளங்கும். மலாலா அமைதித் தூதராக இந்தியாவுக்கு அழைக்கப்பட்டால், அதனை சிவசேனைக் கட்சி மனப்பூர்வமாக வரவேற்றும் என்று சஞ்சய் ரெளத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் இசைக் கலைஞர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சியை, மும்பையில் நடத்த எதிர்ப்பு தெரிவித்தது, மும்பையில் அண்மையில் நடைபெற்ற பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் குர்ஷித் கசூரின் நூல் வெளியீட்டு விழாவுக்கு இடையூறு ஏற்படுத்தியது, மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகிகளின் கூட்டத்தில் புகுந்து ரகளை செய்தது என்று பாகிஸ்தானுக்கு எதிரான தங்களது நடவடிக்கைகளால், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உள்ளிட்டோரின் கண்டனத்துக்கு சிவசேனைக் கட்சியினர் ஆளாகினர். இந்த நிலையில், சஞ்சய் ரௌத் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-http://www.dinamani.com
நீங்க நடத்துகின்ற நாடகம் பத்தாதுன்னு புதுசா ஒரு நாடகத்தை ஆரம்பிக்க போகின்றீர்களா?