சீன பட்டாசு ஆக்கிரமிப்பால் 40 சதவீத விற்பனை பாதிப்பு: ஆலை உரிமையாளர்கள் கவலை

சீன பட்டாசு வருகையால், சிவகாசி பட்டாசு ஆலைகளில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வட மாநில ஆர்டர் 40 சதவீதம் குறைந்துள்ளதால் உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் 850-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றன. இந்த ஆலைகளில் சுமார் ஒரு லட்சம் பேர் நேரடியாகவும், 2 லட்சத்திற்கு மேற்பட்டோர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். சிவகாசியில் உற்பத்தியாகும் பட்டாசுகள் இந்திய அளவில் 90 சதவீதம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த தொழிலில் ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடிக்கு அதிகமாக வியாபாரம் நடக்கிறது. கலால் மற்றும் விற்பனை வரியாக மத்திய, மாநில அரசுகளுக்கு கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது. கடந்த ஆண்டு சீன பட்டாசு வருகை காரணமாக சிவகாசி பட்டாசு விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டது.

இதுதவிர வட மாநிலங்களில் திருமண நிகழ்ச்சிகள், தசரா போன்ற  பண்டிகை நாட்களில் பட்டாசு தேவை குறைவு போன்ற காரணங்களாலும் பட்டாசு விற்பனை பாதித்தது. இதனால் பெரிய பட்டாசு ஆலைகளில் கடந்த ஆண்டே அதிகளவில் சரக்குகள் தேக்கமடைந்தன. இந்த ஆண்டு ஆரம்பம் முதலே பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பணிகள் மந்தமாகவே நடைபெற்று வந்தன. இருப்பினும் பட்டாசுக்கான வட மாநில ஆர்டர்கள் இந்த ஆண்டு மேலும், மேலும் குறைந்து கொண்டே வந்ததால் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் ஆலைகளை இயக்கவே சிரமப்பட்டு வந்தனர்.

இதற்கிடையே தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், வட மாநில ஆர்டர்கள் இதுவரை அதிகரிக்கவில்லை. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வட மாநிலங்களில் பட்டாசு விற்பனை மிகவும் மந்தமாக உள்ளதால் 40 சதவீதம் வரை விற்பனை பாதித்துள்ளதாக ஆலை உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

-http://www.dinamani.com

TAGS: