தலித்துகள் கொலை குறித்து மோடி தொடர் மௌனம்: காங்கிரஸ் கண்டனம்

narendra modi“”ஹரியாணாவில் தலித்துகள் கொலை செய்யப்பட்டது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காக்கிறார்; அதேசமயம், பிரிட்டனில் விரைவில் மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயணம் குறித்து அவர் விரிவாகப் பேசுகிறார்” என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்தது.

நாட்டு மக்களுக்கு மனதின் குரல் (“மன் கீ பாத்’) என்னும் வானொலி நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை ஆற்றிய உரை குறித்து, இவ்வாறு காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தில்லியில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.என். சிங் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

நமது நாட்டின் பிரதமராக அவர் இருக்கிறார். ஆனால், நாட்டு மக்களால் இன்று பரவலாகப் பேசப்படும் ஹரியாணாவில் தலித்துகள் கொலை செய்யப்பட்ட சம்பவம், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து அவர் பேசவில்லை. இது துரதிருஷ்டவசமானது.

ஹரியாணாவில் தலித்துகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும், அதுதொடர்பாக மத்திய அமைச்சர் தெரிவித்த கொடூரமான கருத்துக்கும் அவர் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.

அதுபோல், நாட்டில் உள்ள தலித்துகளின் நலன்களை எப்படி பாதுகாக்கப் போகிறார் என்பதையும் பிரதமர் தெரிவிக்கவில்லை.

மேலும், சாமானிய மக்களை வெகுவாக பாதித்துள்ள பருப்பு விலை உயர்வு குறித்தும் பிரதமர் எதுவும் கூறவில்லை.
ஆனால், தாம் பிரிட்டனில் விரைவில் மேற்கொள்ளவுள்ள சுற்றுப்பயணம் குறித்தும், லண்டனில் இருக்கும் டாக்டர் அம்பேத்கரின் இல்லத்துக்கு செல்ல இருக்கும் திட்டம் குறித்தும் பிரதமர் விரிவாகப் பேசுகிறார் என்றார் ஆர்.பி.என். சிங்.

ஹரியாணா மாநிலத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள், ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்தவர்களால் அண்மையில் எரித்துக் கொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பான கேள்விக்கு மத்திய இணையமைச்சர் வி.கே. சிங் கருத்து கூறும்போது, “நாய் மீது கல்லெறியும் சம்பவத்துக்கு எல்லாம், அரசு பொறுப்பு ஏற்க முடியுமா?’ எனத் தெரிவித்திருந்தார். இதேபோல், ஹரியாணா முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான மனோகர் லால் கட்டர், தலித் குழந்தைகள் கொலை செய்யப்பட்ட சம்பவம், தனிப்பட்ட இருகுடும்பங்களுக்கு இடையேயானது என்றார்.

மத்திய அமைச்சர் வி.கே. சிங் மற்றும் ஹரியாணா முதல்வர் கட்டரின் இந்தக் கருத்துகளுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அவர்கள் இருவரையும் உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அக்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

-http://www.dinamani.com

TAGS: