தமிழக மீனவர்கள் 34 பேர் சிறைபிடிப்பு- இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்

fishermen39-600ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 34 தமிழக மீனவர்களையும் அவர்களின் 7 படகுகளையும் இலங்கை கடற்படையினர் இன்று சிறைபிடித்து சென்றுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் மற்றும் நாகப்பட்டிணம் பகுதிகளில் இருந்து நேற்று 700க்கும் மேற்பட்ட விசைபடகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் மீன்பிடித்துவிட்டு இன்று காலை கரை திரும்ப வேண்டிய நிலையில், பாரம்பரிய பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

நாகை மீனவர்கள் கைது அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் நாகை பகுதியை சேர்ந்த 4 படகுகளையும், அதில் இருந்த 23 மீனவர்களையும் சிறை பிடித்து சென்றனர். இவர்கள் அனைவரும், காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் இதேபோல், ராமேஸ்வரத்தை சேர்ந்த 3 விசைப்படகுகளையும் அதில் இருந்த 11 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 11 பேரையும் மன்னார் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக இலங்கை கடற்படையினர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

86 மீனவர்கள் விடுதலை

ஏற்கெனவே சிறை பிடிக்கப்பட்ட 86 மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க கோரி தமிழக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், சிறையில் உள்ள மீனவர்கள் 28ம் தேதி விடுதலை செய்யப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்ததை அடுத்து மீனவர்கள் தங்களது வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு நேற்று மீன்பிடிக்க சென்றனர்.

மீண்டும் அட்டகாசம்

இதேபோல், இலங்கையில் உள்ள மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தியும், கச்சத்தீவை திரும்ப பெற கோரியும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தை அ.தி.மு.க. எம்.பி.க்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜை நேற்று சந்தித்து கொடுத்தனர்.

இந்நிலையில், தமிழக மீனவர்கள் மீண்டும் சிறைபிடிக்கப்பட்டு இருப்பது மீனவர்கள் மத்தியில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசுடமையாக்க முடிவு இதனிடையே தமிழக மீனவர்களின் படகுகள் மற்றும் வலைகள் அரசுடமையாக்கப்படும் என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதால், இலங்கை மீனவர்களின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலைகள், மீன்பிடி உபகரணங்கள் அழிக்கப்படுவதாக கூறிய அவர், எல்லை தாண்டி மீன்பிடித்த புகாரில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படும் அதே நேரத்தில் அவர்களது படகுகள் விடுவிக்கப்பட வாய்ப்பில்லை என்றும் அமைச்சர் மகிந்த அமரவீர கூறியுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: