வாடகைத்தாய் நடைமுறை என்பது இந்தியாவில் பெரும் வர்த்தகமாக வளர்ந்து வருகிறது
வர்த்தக நோக்கிலான வாடகைத்தாய்கள் நடைமுறையை இந்தியாவில் தடைசெய்யவிரும்புவதாக இந்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.
இதற்கான சட்டத்தை இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றினால் இந்தியாவில் சமீப ஆண்டுகளில் பெரும் வர்த்தகமாக வளர்ந்துவரும் வாடகைத்தாய்கள் நடைமுறை இந்தியாவில் தடை செய்யப்படும்.
குறிப்பாக வெளிநாட்டினர் தமது குழந்தைகளை வயிற்றில் சுமந்து பெறுவதற்காக இந்தியத்தாய்மார்களுக்கு பணம் தரும் நடைமுறை முற்றாக தடுக்கப்படும்.
இத்தகைய வாடகைத்தாய்மார்கள் மூலம் குழந்தைகளைப்பெற்றுக்கொள்ளும் நடைமுறையில் பெரும்பாலும் செயற்கைமுறையிலான கருத்தரிப்பு தொழில்நுட்பம் அல்லது கருவுற்ற கருமுட்டையை அதன் உண்மையான தாயிடமிருந்து எடுத்து வாடகைத்தாயின் கருப்பையில் பதியனிடும் நடைமுறை பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவுக்குள்ளான வாடகைத்தாய் வசதிகள் கருவுற முடியாத திருமணமான இந்திய தம்பதிகளுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதே இந்திய அரசின் நிலைப்பாடு என்று இந்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய உச்சநீதிமன்றம் கடந்த மாதம் இத்தகைய தடையை பரிந்துரை செய்திருந்தது. அப்போது வர்த்தக ரீதியிலான வாடகைத்தாய் நடைமுறையானது, கருமுட்டையை விலைக்கு விற்பதற்குச் சமம் என்று இந்திய உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.
வர்த்தக நோக்கிலான வாடகைத்தாய்கள் நடைமுறையை இந்தியாவில் தடைசெய்யவிருப்பதாக இந்திய அரசு எடுத்திருக்கும் முடிவு ஏழைப்பெண்களையே அதிகம் பாதிக்கும் என்கிறார் சென்னையிலுள்ள வாடகைத்தாய்மார்களின் உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் ஏ ஜெ ஹரிஹரன். -BBC