டாஸ்மாக் எதிர்ப்பு பாடல் பாடிய கோவன் தே.பா. சட்டத்தின் கீழ் கைது: தமிழக அரசு நடவடிக்கை

kovanசென்னை: மது ஒழிப்பிற்காக மூடு டாஸ்மாக்கை மூடு என்று பாடல் இயற்றி பாடிய திருச்சி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலைக் குழுவைச் சேர்ந்த கோவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக்கிற்கு எதிராக அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக்கை மூடக்கோரி பொதுமக்களே போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மதுபான கடைகளை இழுத்து மூடும் போராட்டத்தை கையிலெடுத்துவரும் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் அமைப்பான “மக்கள் அதிகாரம்” அமைப்பினர் பல்வேறு கட்டமாக போராட்டங்களை நடத்தினர். மக்கள் அதிகாரம் அமைப்பினர் ” மூடு டாஸ்மாக்கை மூடு, நீ ஓட்டு போட்டவன் மூடுவான்னு காத்திருப்பது கேடு இன்னும் எத்தனை பிள்ளைகள் குடிச்சி சாகனும் எத்தனை தாலிகள் அறுக்கனும் மூடு டாஸ்மாக்கை மூட்டு” எனும் பாடலை வெளியிட்டு அதை கலை வடிவத்தில், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வீதி நாடகமாக நடத்தி வந்தார்கள். இது மட்டுமல்லாது…. ” ஊருக்கொரு சாரயம் தள்ளாடுது தமிழகம்… ஊத்திக்கொடுத்த உத்தமிக்கு போயஸ்ல உல்லாசம்” என்ற பாடல் சில தினங்களாக வாட்ஸ் அப்பில் வெளியானது. இந்நிலையில், இந்தப் பாடலை இயற்றி பாடிய திருச்சி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலைக் குழுவைச் சேர்ந்த கோவனை, இன்று அதிகாலை 2.30 மணிக்கு திருச்சி குழுமணி அருகில் உள்ள அரவனூரில் போலீசார் திடீர் கைது செய்து செய்தனர்.

கைது செய்யப்பட்ட கோவனை மிக மோசமாக நடத்தியதாகவும், அவரை போலீசார் எங்கு கொண்டு செல்கிறார்கள் என்பதைக் கூற மறுத்துவிட்டதாகவும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் 20க்கும் மேற்பட்டவர்கள் திருச்சி உறையூர் காவல்நிலையத்திற்கு சென்று விசாரித்தபோது, தோழர் கோவனை அழைத்து வந்தது நாங்கள் இல்லை என தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து உறையூர் காவல்நிலையத்தை மக்கள் கலை இயக்கத்தினர் முற்றுகையிடப்போவதாக செய்திகள் பரவியதால் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில் கோவனின் குடும்பத்தாருக்கு தொலைபேசியில் பேசிய சென்னை குற்றப் பிரிவு போலீசார், ” “கோவனை, மூடு டாஸ்மாக்கை மூடு பாடலை வாட்ஸ் ஆப், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பியதற்காக கைது செய்துள்ளோம், அவரை காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளதாகவும்” கூறியுள்ளார்கள்.

மேலும் அவர் மீது இந்திய தண்டனை சட்டப்படி தேசத்துரோகம், சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையில் மோதல் ஏற்படுத்துதல், அவதூறு செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் கூறினார்கள். இந்நிலையில், கோவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்துள்ளது.

ஆனால் கோவனை கைது செய்து எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதை சொல்ல மறுப்பதாகவும், அவரை மக்கள் முன் காண்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ள மக்கள் அதிகாரம் அமைப்பினர், இதுபோன்ற நடவடிக்கைகளால் மது ஒழிப்புகளுக்கு எதிரான போராட்டங்களை முடக்கிவிடலாம் என நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது. இனிதான் டாஸ்மாக்கை மூடும் எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். காந்தியவாதி சசிபெருமாள் மரணத்திற்கு பின்னர் தமிழகத்தில் டாஸ்மாக்கை மூடக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இப்போது கோவன் கைது செய்யப்பட்டுள்ளதால் போராட்டம் மீண்டும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS: