உலகிலேயே அதிக மாசுபட்ட நகரம் தில்லி: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

நச்சுத் துகள்கள் காரணமாக உலகிலேயே மிக மாசுபட்ட நகரமாக தில்லி மாறியுள்ளது என ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

தில்லியின் நில அமைப்பு, வானிலை, ஆற்றல் நுகர்வு கலாசாரம், நகர மக்கள்தொகை அதிகரிப்பு காரணமாக அதிகரிக்கும் காற்று மாசுபாடு ஆகியவை குறித்து பிரிட்டனின் சுர்ரே பல்கலைக்கழகக் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று மதிப்பீடு செய்துள்ளது.

இந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான பிரசாந்த் குமார் இதுகுறித்து கூறியதாவது: உலக அளவில் மனிதர்களின் சுகாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளில் முக்கியமான ஒன்றாக காற்று மாசுபாடும் உள்ளது. அந்த வகையில், வளர்ந்து வரும் மிகப்பெரிய நகரமான தில்லியில் ஆண்டுதோறும் காற்று மாசுபாடு காரணமாக கூடுதல் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

இதற்கு, வாகனங்கள் அதிகரிப்பு, தொழிற்சாலை உற்பத்தி, அதிகரித்து வரும் மக்கள்தொகை ஆகியவற்றைக் குறிப்பிட்டாலும், நச்சுத் துகள்கள் தில்லி பிரதேசத்தில் அதிகளவில் சூழ்ந்திருப்பதே முக்கிய காரணமாகும்.

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் தில்லியும் ஒன்று. உலகிலேயே 5ஆவது மிகப்பெரிய நகரமான தில்லி சுமார் 2.58 கோடி மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. இது தொடர்ந்து அதிகரிக்கக் கூடும்.

இந்த வளர்ச்சியின் அடிப்படையில் கணிக்கப்பட்டதில், தில்லியில் 2010ஆம் ஆண்டு 47 லட்சமாக இருந்த வாகனங்களின் எண்ணிக்கை, 2030ஆம் ஆண்டில் 2.60 கோடியாக இருக்கும்.

தில்லியில் எரிசக்தி பயன்பாடு 2001 முதல் 2011ஆம் ஆண்டு வரையில் 57 சதவீதம் அதிகரித்துள்ளது. தில்லியில், காற்றை சுத்தப்படுத்தப்படுவதற்கான திறந்த வெளிகள் மிகக் குறைவு.

இதுவே, சென்னை, மும்பை போன்ற கடற்கரையை ஒட்டிய நகரங்களில் மாசுபட்ட காற்றானது, சுத்தமான கடல் காற்றால் சுழற்சி முறையில் மாற்றம் செய்யப்படலாம். ஆனால், தில்லியைச் பொறுத்த வரையில் அதன் சுற்றுப்புறப் பகுதிகள் சில நேரங்களில் தில்லி நகரத்தை விட நச்சுக் காற்று நிறைந்ததாக உள்ளன.

இதற்கு, தொழிற்சாலைகளில் இயக்க ஆற்றலுக்காக மரங்கள், விவசாய பொருள்கள், மாட்டுக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை எரிக்கப்படுவதையும், டீசல் ஜெனரேட்டர்கள் உபயோகப்படுத்தப்படுவதையும் உதாரணமாகக் கூறலாம். இவையே, மனித சுகாதாரத்துக்கு அபாயத்தை ஏற்படுத்தும் நுண் துகள் மாசுகளை ஏற்படுத்துகின்றன. சென்னையை விட 10 மடங்கு அதிக நுண்துகள் மாசுபாடு தில்லியில் உள்ளது.

தில்லியில் உள்ள உயர்ந்த கட்டடங்களின் காரணமாக சுவாசக் காற்று மற்றும் வானிலையில் பாதிப்பு ஏற்படுகிறது. உலக சுகாதார அமைப்பு கடந்த ஆண்டு மே மாதம் வெளியிட்ட அறிக்கையின்படி, உலகில் அதிகமான மாசுபட்ட நகரமாக தில்லி குறிப்பிடப்பட்டிருந்தது என்று பிரசாந்த் குமார் கூறினார்.
தீர்வுகள் என்ன?

• நச்சுக் காற்றை சுத்தப்படுத்தும் வகையில், சாலைகளின் ஓரங்களில் பசுமையை உருவாக்க இயற்கையாகவோ, செயற்கையாகவோ புல்வெளிகளை ஏற்படுத்த வேண்டும்.
• பசுமையான நிலங்கள், மரங்களை உருவாக்க வேண்டும்.
• தரமற்ற எரிபொருள்களின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்.

-http://www.dinamani.com

TAGS: