லஷ்கர் அமைப்புக்கு பாகிஸ்தான் ஆதரவு: முஷாரஃபின் கருத்தில் ஆச்சரியம் இல்லை; அமெரிக்க எம்.பி.

pakistan terrorலஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் அரசு ஆதரித்து, உதவிகளை மேற்கொண்டதாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் கூறியதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று, அமெரிக்க நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் டிம் கெய்ன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை மேலும் கூறியதாவது:

லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் ஆதரித்ததாக முஷாரஃப் அண்மையில் தெரிவித்த கருத்தில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துக்கும் அப்போதைய பாகிஸ்தான் அரசில் உள்ள சில சக்திகளுக்கும் இடையே தொடர்பு இருந்தது என்பதை மறுக்க முடியாது.

உளவுத் துறையினரின் தகவல்களை ஆராய்ந்தால், அது எத்தனை காலத் தொடர்பு?, அதிகாரப்பூர்வமாக எப்படி ஏற்பட்டது? உள்ளிட்ட கேள்விகள் எழும்பும். ஆனால் மேற்கண்ட இரு தரப்புக்கும் இடையே கண்டிப்பாக ஒரு தொடர்பு இருந்தது உண்மையே.

எனவே பாகிஸ்தான் அரசில் உள்ள ஒரு சில சக்திகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்பு இருந்ததை அவர்கள் (முஷாரஃப்) மறுப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.

கடந்த வாரம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபை நான் சந்தித்தேன். அப்போது பயங்கரவாதத்துக்கு எதிரான போர், பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்குத் தொடர்ந்து புகலிடம் அளிக்கப்படுவது உள்ளிட்டவை குறித்து அவருடன் விவாதித்தேன்.

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஷெரீஃப் தலைமையிலான பாகிஸ்தான் அரசு வேறு திசையில் பயணிக்கிறது.

ஒசாமா பின்லேடன் இறப்புக்குப் பிறகு பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடினமான உறவே காணப்படுகிறது.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட வேண்டும். இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லை தாண்டி துப்பாக்கியால் சுடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது கவலை தருகிறது என்றார் கெய்ன்.

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷாரஃப் 2 தினங்களுக்கு முன் அளித்த பேட்டியில், “”1990-ஆம் ஆண்டு காஷ்மீரில் சுதந்திரப் போராட்டம் தொடங்கியபோது லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட 12 பயங்கரவாத அமைப்புகள் உருவாகின.

அந்த அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அரசு ஆதரவளித்து, பயிற்சி அளித்ததால், காஷ்மீரில் தங்கள் உயிரைக் கொடுத்து போரிட்டனர். ஒசாமா, அய்மான் அல் ஜவாஹிரி ஆகியோர் பாகிஸ்தானின் கதாநாயகர்களாக இருந்தனர். தற்போது வில்லன்களாக மாறிவிட்டனர்” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

-http://www.dinamani.com

TAGS: