சீனாவிடம் சரணடைந்தார் நேரு: கிரண் ரிஜ்ஜூ கருத்தால் சர்ச்சை

china india warஐதராபாத்: கடந்த 1962ம் ஆண்டு நடந்த போரின் போது சீனாவிடம் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு சரணடைந்தார் என மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐதரபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கிரண் ரிஜ்ஜூ கூறுகையில், கடந்த 1962ம் ஆண்டு நடந்த போரின் போது வடகிழக்கு மக்களை நேரு கைவிட்டுவிட்டார். அந்த போரில் சீனாவிடம் நேரு சரணடைந்தார். நம்மை கைவிட்டது வருத்தத்திற்குரிய விஷயம். வல்லபாய் படேல் நாட்டை ஒன்று சேர்த்தார். ஆனால் நேரு நாட்டை கைவிட்டுவிட்டு சரணடைந்தார். கடந்த 1947ம் ஆண்டு 565 மாகாணங்களை படேல் ஒன்று சேர்த்தார். ஆனால் அதற்கு படேலுக்கு பலன் கிடைக்கவில்லை. தோல்விடைந்தவர்கள், வெற்றி பெற முடியாதவர்கள் வரலாற்றில் இடம்பெற்று விட்டனர். கடந்த 1962ம் ஆண்டு எனது சொந்த கிராமத்தை சீனா ராணுவ படைகள் ஆக்கிரமித்து வருகின்றன. அசாம் வரை சீன ராணுவம் சென்றது. அப்போது உங்களை பாதுகாப்போம் என மக்களிடம் நேரு உறுதியளித்தார். ஆனால் சீனாவிடம் சரணடைவதாக ரேடியோவில் அறிவித்தார். டாடா டாடா பைபை என நேரு கூறி நம்மை கைவிட்டுவிட்டார் என கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் நினாங் எரிங், கடந்த 1962ம் ஆண்டு நடந்த போரின்போது வடகிழக்கு மாநிலங்களை நேரு கைவிட்டுவிட்டதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கூறுவது தவறு. அது அவரின் சொந்த கருத்து. இது அப்பகுதி மக்களிடம் தவறான செய்தியை பரப்பியது போல் ஆகிவிடும் என கிரண் ரிஜ்ஜூவிடம் கூற விரும்புகிறேன். நேருவையும், படேலையும் ஒப்பிடுவது தவறு. அருணாச்சல பிரதேச மாநிலத்திற்காக நேரு குடும்பத்தினர் செய்த காரியங்களை யாரும் மறந்துவிட முடியாது என கூறினார்.

-http://www.dinamalar.com

TAGS: