சென்னை: தமிழக மீனவர்களின் படகுகளுக்கு கோடிக் கணக்கில் தண்டம் விதிப்போம் என்று இலங்கை அரசு அச்சுறுத்துவதை அனுமதிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை கடல் எல்லைக்குள் புகுந்து மீன் பிடிக்கும் வெளிநாட்டு படகுகளுக்கு இலங்கை ரூபாய் 25 கோடி அபராதம் விதிக்க அந்நாட்டு அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
எந்த ஒரு நாட்டுக்கும் எதிராக இந்த முடிவு எடுக்கப்படவில்லை என்று இலங்கை அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும், இது இந்தியாவுக்கு, குறிப்பாக தமிழக மீனவர்களுக்கு எதிரான நடவடிக்கை தான் என்பதில் சந்தேகமில்லை. நான் ஏற்கனவே கூறியவாறு, உலக அளவில் கடைபிடிக்கப்படும் மரபுகளின்படி பார்த்தால், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் சென்று மீன் பிடிப்பதாக குற்றஞ்சாட்டுவதே அபத்தம் ஆகும். குறுகிய கடல் எல்லை கொண்ட பகுதிகளில் ஒரு நாட்டு மீனவர்கள் இன்னொரு நாட்டின் எல்லைக்குச் சென்று மீன் பிடிப்பது அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், நாடுகளின் கடல் எல்லை தெளிவாக வரையறுக்கப்படுவதற்கு முன்பாகவே காலம் காலமாக மீன் பிடித்து வரும் மீனவர்களின் உரிமையை புதிதாக வரையறுக்கப்படும் எல்லைகளால் பறிக்க முடியாது. இதை பன்னாட்டு நீதிமன்றங்கள் பல முறை உறுதி செய்திருக்கின்றன.
இத்தகைய சூழலில், தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளுக்கு கோடிக்கணக்கில் தண்டம் விதிப்போம் என அச்சுறுத்துவது அந்நாட்டு ஆட்சியாளர்களின் அதிகாரத் திமிர் பீறிடுவதையே காட்டுகிறது. இதை அனுமதிக்க முடியாது; அனுமதிக்கவும் கூடாது.
நிலைமை இப்போது மோசமடைந்துள்ள நிலையிலாவது முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடனடியாக கோடநாட்டில் இருந்து சென்னைக்கு திரும்ப வேண்டும். அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி அவர்களுடன் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து நமது நிலைப்பாட்டை வலியுறுத்த வேண்டும்; அதை உடனடியாக செய்ய வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.