விஜயகாந்த்தால் தமிழர்களுக்கு எவ்வளவு கேவலம்?… சீமான் வேதனை

Seemanதிருச்சி: எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார் விஜயகாந்த். இவரது பேச்சைக் கேட்டால் பிற மாநிலத்தில் வாழும் தமிழர்களுக்கெல்லாம் எவ்வளவு கேவலம். தமிழர்களைக் கேவலமாக நினைக்க மாட்டார்களா என்று வேதனை வெளியிட்டுள்ளார் நாம் தமிழர் தலைவர் சீமான். வருகிற சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நாம் தமிழர் கட்சி தனது வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அப்படி ஒரு வேட்பாளர் அறிமுகக் கூட்டம் திருச்சி, கீழப்புதூரில் நடந்தது. அப்போது கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்துப் பேசினார் சீமான். அவரது பேச்சிலிருந்து….

தமிழகத்தில் காமராஜர் ஆட்சிக்காலத்தில் ஊழல் என்றால் என்னவென்று தெரியாது. தனக்கு கிடைக்காத கல்வி வருங்கால பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்று ஓடி, ஓடி படிக்க வைத்தார் காமராஜர்.

ஆனால் இப்போது தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் கிடைக்கிறது. அந்த வருமானம் அரசாங்கத்துக்கு போய் சேருகிறது என்றால், டாஸ்மாக் தொழிற்சாலைகள் மூலம் கிடைக்கும் வருமானம் யாருக்கு போய் சேருகிறது?. இங்கு தெருவுக்கு 4 டாஸ்மாக் கடைகள் இருக்கும்போது, 200 கார்டுகளுக்கு ஒரு ரேஷன்கடை என்று ஏன் கொண்டு வர முடியாது?.

அரசு போக்குவரத்து கழகத்தில் 40 ஆயிரம் கோடி இழப்பு என்கிறார்கள். ஆனால் அனைத்து பஸ்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு செல்கிறார்கள். அப்படி இருக்கும்போது இழப்பு எப்படி வருகிறது.

கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஆற்றுமணலை அள்ள முடியாது. ஆனால் தமிழகத்தில் அள்ளி விற்பனை செய்கிறார்கள். இதனை கண்டித்து போராட்டம் நடத்தினால் தடியடி நடத்தி சிறை பிடிக்கிறார்கள்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தால் எந்த பயனும் இல்லை. அடிப்படை அரசியல் மாற்றம் வேண்டும். மக்கள் பிரச்சினைகளை அரசு கையில் எடுக்காதபோது, அரசை மக்கள் கையில் எடுப்பதை தவிர வேறு வழியில்லை.

வருகிற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. இதில் 50 இடங்களில் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டியக்கத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை. நாங்கள் தனித்து தான் போட்டியிடுகிறோம். அதிமுக. திமுக என்ற இரு கட்சிகளுடன் வைகோ மாறி, மாறி கூட்டணி வைக்காமல் இருந்து இருந்தால் நாங்கள் இந்த கட்சியை தொடங்க வேண்டிய அவசியம் இருந்து இருக்காது.

அதிமுக, திமுக இந்த இரு கட்சிகளுக்கும் இந்த தேர்தல் வாழ்வா?. சாவா?. என்ற நிலையில் இருக்கிறது. நேர்மையானவர்களே எங்கள் கட்சியின் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளார்கள்.

தமிழர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதால் மற்றவர்கள் வாழ்கிறார்கள். அப்படித்தான் ஜெயலலிதாவும் கருணாநிதியும் விஜயகாந்தும் அரசியலில் வாழ்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த். அவரது பேச்சை கேட்டால் மற்ற மாநிலங்களில் என்ன நினைப்பார்கள். தமிழனை கேவலமாக நினைக்க மாட்டார்களா?

நாம் தமிழர் ஆட்சி அமைந்தால் ஆடு, மாடு மேய்ப்பது அரசு வேலை, தமிழ் படித்தால் உள்ளூரில் வேலை, ஆங்கிலம் மற்றும் பிறமொழி படித்தால் வெளிநாட்டில்தான் வேலை. கல்வி, மருத்துவம் இலவசம். முதல்வர் கூட உள்ளூர் அரசு மருத்துவமனையில்தான் வைத்தியம் பார்க்கணும். தனியார் முதலாளிகளால்தான் தரமான கல்வியும், மருத்துவமும் தரமுடியும் என்றால் இந்த ஆட்சி எதுக்கு. கலைத்திட வேண்டியதுதானே?

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தடை, கேட்டால் மாடு கஷ்டப்படுதாம். மாடு பிடித்து காயம்படுகின்ற நாங்களே கஷ்டப்படல. நீங்க என்ன கஷ்டப்படுவது. இந்திய ராணுவத்துல குதிரை ஓடுதே, பாலைவனத்தில் ஒட்டகம் பயன்படுத்தப்படுதே, அப்போ குதிரையும், ஒட்டகமும் சிரிச்சிக்கிட்டே போகுதா? கேரளாவில் ஓணம் பண்டிகையில் காட்டிலிருக்கும் யானைகளை வரிசையில் நிற்க வைத்து விழா எடுக்கப்படுதே. அப்போது யானை தானாக வந்து நின்று விடுகிறதா?

ஜல்லிக்கட்டுகள் உள்ளவரை சினை ஊசிகளுக்கு வேலையில்லை. காளைகளை அழிக்க வேண்டும் என்று திட்டமிட்டு, காளைகள் மேல் இரக்கப்படுவதுபோல் அத்தனையும் அடிமாடாக அனுப்ப திட்டமிட்டதன் விளைவுதான் ஜல்லிக்கட்டு தடை என்றார் சீமான்.

முன்னதாக திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் சட்டசபைத் தொகுதி வேட்பாளர்களை அறிவித்தார் சீமான். அதன்படி திருச்சி கிழக்கு தொகுதி-இரா.பிரபு, மேற்கு தொகுதி- சேது.மனோகரன், திருவெறும்பூர்- சோழசூரன், ஸ்ரீரங்கம்-கமல், மணப்பாறை-அருணகிரி, மண்ணச்சநல்லூர்- மணிகண்டன், முசிறி-ஆசைதம்பி, லால்குடி- சம்பத், துறையூர்-சத்யா செல்வராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

TAGS: