நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு பாகிஸ்தானில் கூடுதல் ராணுவப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாவூத்தின் நெருங்கிய கூட்டாளியாக விளங்கிய சோட்டா ராஜன் கைது செய்யப்பட்டிருப்பதையடுத்து, இந்தப் பாதுகாப்பு நடவடிக்கையை பாகிஸ்தான் அரசு மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
மும்பையில் நிழல் உலக தாதாவாக வலம் வந்த தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தவர் சோட்டா ராஜன்.
மும்பையில் கடந்த 1993-இல் தாவூத் இப்ராஹிமின் துணையுடன் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதையடுத்து, அவரிடமிருந்து சோட்டா ராஜன் விலகி தனித்துச் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், இந்தோனேசியாவில் உள்ள பாலி நகரில் அந்நாட்டு போலீஸாரால் சோட்டா ராஜன் கைது செய்யப்பட்டார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில்தான் வசிக்கிறார்’ எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் சோட்டா ராஜன் மீது உள்ள வழக்குகளை சுட்டிக்காட்டி அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், பாகிஸ்தானில் கராச்சி, இஸ்லாமாபாத் ஆகிய நகரங்களில் உள்ள தாவூத் இப்ராஹிமின் இல்லங்களுக்கு அந்நாட்டு ராணுவத்தினர் கூடுதல் பாதுகாப்பை வழங்கியுள்ளதாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-http://www.dinamani.com


























பயங்கரவாதத்திர்க்குப் பாதுகாப்பு?