எல்லை தாண்டி வந்தால் 25 கோடி அபராதம்! இலங்கை அரசின் புதிய உத்தரவு! கலக்கத்தில் மீனவர்கள்

tamilnadu_fishermen_001தமிழக மீனவர்களைச் சுட்டுக்கொன்றும், தாக்குதல் நடத்தி ஊனப்படுத்தியும், பிடித்துச் சென்று சிறையில் அடைப்பதுமான இலங்கைக் கடற்படையின் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இந்த நிலையில், ‘இனி எல்லை தாண்டி வரும் மீனவர்களின் படகுகளுக்கு ரூ.25 கோடி அபராதம் விதிப்போம்’ என அடுத்த அஸ்திரத்தை அப்பாவி மீனவர்கள் மீது ஏவியுள்ளது இலங்கை அரசு.

பதிலுக்கு, ‘எல்லை தாண்டி வரும் இலங்கை படகுகளுக்கு ரூ.75 கோடி அபராதம் விதிப்போம்’ என்கிறார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

இதுகுறித்து இந்திய இலங்கை நிரபராதி மீனவர் விடுதலைக்கான கூட்டமைப்பின் நிர்வாகி யு.அருளானந்தத்திடம் பேசினோம்.

இந்திய மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதிகளிலேயே மீன்பிடிப்பில் ஈடுபடுகின்றனர். பாக். நீரிணை பகுதி குறுகிய கடல் பரப்பை எல்லையாகக் கொண்டிருப்பதே அதற்குக் காரணம். இதனால் நம் மீனவர்கள் 2 பகுதிகளில் எல்லை தாண்டிச் சென்று மீன்பிடிப்பது தவிர்க்க முடியாததாகிறது.

அதே நேரத்தில், இந்தியாவின் கடல் பகுதியைக் கொண்ட 9 மாநிலங்களில் இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்கின்றனர்.

இந்த நிலையில், கடந்த மாதம் 23-ம் தேதி கொழும்பில் நடந்த கூட்டத்தில் எல்லை தாண்டி வரும் மீனவர்களுக்கு ரூ.25 கோடி அபராதம் விதிப்பது எனத் தீர்மானித்துள்ளனர். உலக நாடுகளில் இல்லாத வழக்கமாக இலங்கையில் இந்த சட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தரை வழியாக உரிய ஆவணங்கள் இன்றி ஒரு நாட்டின் எல்லைக்குள் வேறு நாட்டைச் சேர்ந்தவர் ஊடுருவினால்கூட அந்த நபருக்குக் குறைந்தபட்ச தண்டனையே விதிக்கப்படுகிறது.

கடலுக்குச் செல்லும் மீனவர்கள் இயற்கை இடர்பாடுகளினாலோ, இயந்திரப் பழுதினாலோ எல்லை தாண்டி செல்லும் சூழல் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

மத்திய அரசு இதில் உடனடியாகத் தலையிட்டு இலங்கை அரசின் முடிவைக் கைவிடச் செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு ‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’ என்பதுபோல ‘இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி வந்தால் ரூ.75 கோடி அபராதம் விதிப்போம்’ என மத்திய அமைச்சர் சொல்வது தவறு.

இருநாட்டு மீனவர்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய மாற்று வழிகளை ஆராய்ந்து அதனை பேச்சுவார்த்தை மூலம் உறுதி செய்து ஒப்பந்தமாக உருவாக்குவதே நிரந்தரத் தீர்வாகும் என்றார்.

தமிழகக் கடலோர விசைப்படகு மீனவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சேசுராஜ், 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரின் அட்டூழியங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிடித்துச் செல்லப்படும் ஒரு படகு ரூ.20 முதல் ரூ.30 லட்சம் வரை மதிப்புடையது. வியாபாரிகள், வங்கிகள், வெளிநபர்கள் ஆகியோரிடம் கடன் வாங்கித்தான் படகு வாங்குகிறோம்.

ஒரு படகை நம்பி 20 குடும்பங்கள் வாழ்கின்றன. 45-க்கும் மேற்பட்ட படகுகள் இலங்கை வசம் உள்ளன. ஏற்கெனவே பிடிபட்ட 18 படகுகள் மீட்டு வர முடியாத நிலையில் அழிந்து போனது. இதனை நம்பியிருந்த குடும்பங்கள் கையேந்தி வாழ்க்கை நடத்தும் நிலையில் உள்ளன.

பல மீனவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இலங்கை மீனவர்கள் 1,180 கடல் மைல் அளவுக்கு இந்தியக் கடல் பகுதிக்குள் நுழைந்து விலை உயர்ந்த மீன்களைப் பிடித்துச் செல்கின்றனர்.

நாங்களோ, 30 கடல் மைல்களுக்குள்ளாகவே எல்லை தாண்டி மீன்பிடிக்கிறோம். எல்லை தாண்டக் கூடாது என்றால், எங்களுக்குக் கச்சதீவை மீட்டுக் கொடுங்கள். பி.ஜே.பி. அரசு, தேர்தலுக்கு முன்பே எங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டும் என்றார்.

தமிழக மீனவர்களின் நிலை குறித்து இலங்கை மன்னார் மாவட்ட மீனவர் சம்மேளனத் தலைவர் ஆல்பர்ட் ஜஸ்டின் சொய்சாவிடம் பேசினோம். கடந்த 23-ம் தேதி இலங்கை மீன்வளத் தொழில் அமைச்சர் தலைமையில் அதிகாரிகள், மீனவர் தலைவர்கள், கடற்படையினர் பங்கேற்ற கூட்டம் நடந்தது. அதில், எல்லை தாண்டி வரும் மீனவர்களுக்கு ரூ.15 லட்சம் தண்டம் விதிக்க முடிவு எடுக்கப்பட்டு அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இனி, எல்லை தாண்டும் மீனவர்கள் மீது ‘குடிவரவு – குடியகல்வு’ சட்டத்தின் மூலம் வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளது. இந்திய பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ரூ.15 கோடி…ரூ.25 கோடி அபராதம் என தவறாகச் செய்தி வெளியிட்டுள்ளன.

எனவே இந்திய அரசு மீனவர்களை இலங்கை கடற்பகுதிக்குள் செல்லக் கூடாது எனக் கட்டாயமாக எடுத்துரைக்க வேண்டும். 30 ஆண்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாங்கள் இலக்கு ஏதும் இன்றி வாழ்ந்து வருகிறோம். கடலை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தி வருகிறோம்.

அகதிகளாக வந்த நாங்கள் இந்தியாவின் சோற்றை உண்டிருக்கிறோம். அத்தகைய மக்கள் பாதிக்கப்பட வேண்டும் என்ற தீய எண்ணம், தீய நோக்கம் எங்களுக்குக் கிடையாது. கடல் வளத்தை அழிக்காத வகையில் இந்திய மீனவர்களும் கடல் தொழிலில் ஈடுபட்டால் அவர்களை எதிர்க்கப் போவதில்லை.

இந்தியப் பேரரசு நினைத்தால் மீனவர்கள் அனைவரது தொழிலையும் அவ்வாறு மாற்றித் தரலாம்’’ என்றார்.

இரு நாட்டு அரசுகளும் சேர்ந்து முடிவெடுத்தால்தான் பிரச்சினைக்குத் தீர்வு கிட்டும்.

-http://www.tamilwin.com

TAGS: