“தானே” புயல் சேதத்தை விட வெள்ளத்தால் அதிக உயிர் சேதம்: தண்ணீரில் தத்தளிக்கும் கடலூர்

cuddalore_flood_001கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் தாமதமாக வழங்கப்படுவதால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் முழுவதும் பெய்த கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

அந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 32ஆக உயர்ந்துள்ளது.

2000-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்திருப்பதால் 650 ஊராட்சிகளில் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான மக்களை மீட்க, 85 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், வெள்ளம் பாதித்த பகுதிகளில் முகாமிட்டு பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வருகின்றனர்.

57 கிராமங்களைச் சேர்ந்த 5120 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு 28 மையங்கள் மூலம் அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

அரித்துச் செல்லப்பட்ட சாலைகளில் மண் கொட்டி சாலையை சமன் படுத்தும் பணிகளும், குண்டும் குழியுமாக உள்ள சாலைகளிலும், துண்டிக்கப்பட்ட சாலைகளிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அமைச்சரவைக் குழுவினர் நேற்று கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து ஆய்வு நடத்தியுள்ளனர்.

இதனிடையே நிவாரண உதவிகள் சரிவர கிடைக்கவில்லை எனவும், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவில்லை எனவும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வீசிய ‘தானே’ புயலின் போது 21 பேர் பலியாகினர்.

எனவே, தற்போது கடலூரில் வெள்ளம் ஏற்படுத்திய உயிர்சேதம் ‘தானே’ புயலின்போது ஏற்பட்டதைக் காட்டிலும் கூடுதலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-http://www.newindianews.com

TAGS: