தண்ணீரில் மூழ்கி தத்தளிக்கும் சென்னை: முதல்வர் தொகுதியில் மேயரை விரட்டியடித்த பொது மக்கள்

rk_nagar_001முதல்வரின் தொகுதியான சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நிவாரண நடவடிக்கைகலை மேற்பார்வையிட சென்ற அதிகமுகவினரை பொது மக்கள் அடித்து விரட்டியுள்ளனர்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியின் மேற்குப்பகுதி மிகவும் தாழ்வான பகுதி என்பதால், நேதாஜிநகர், குமரன்நகர், துர்காதேவி நகர், மூப்பனார் நகர், மீனாம்பாள் நகர், ஜெ.ஜெ.நகர், எழில்நகர், தண்டையார்பேட்டை, கொடுங்கையூர் போன்ற பகுதிகளில் மழை நீர் பெருமளவில் தேங்கியுள்ளது.

இந்நிலையில், வெள்ள நிவாரணப் பணிகளை பார்வையிட்டு வரும் அமைச்சர்கள் மாநகராட்சி ஆணையர் விக்ரம்கபூர், மேயர் சைதை துரைசாமி, அமைச்சர் வளர்மதி, மாவட்டச் செயலாளரும், ஆர்.கே.நகர் தொகுதி மாஜி எம்.எல்.ஏ.வுமான பி.வெற்றிவேல் மற்றும் ஏராளமான அதிகாரிகள், அ.தி.மு.க.வினர் ஆர்.கே.நகரின் தாழ்வான பகுதிகளில் இருந்து நிவாரணப் பணிகளை பார்வையிடத் தொடங்கியுள்ளனர்.

அப்போது சிலர், ”இப்பதான் உனக்கு அம்மா தொகுதி இங்கே இருக்கறதே தெரிய வந்ததா? மரியாதையா ஓடிப் போயிடு” என்று எச்சரித்துள்ளனர்.

பின்னர், நிலைமை மோசமாவதைக் கண்ட மேயர் சைதை துரைசாமி, காரில் ஏறமுயன்ற போது “இது எங்க ஏரியா… உள்ளே வராதே, அப்படியே ஓடிப்போயிடு” என்று, அவரை காரில் ஏறவிடாமல் ஒரு கும்பல் கீழே இழுத்துத் தள்ளியுள்ளது.

இதையடுத்து பொலிசார் கூட்டத்தை விரட்டிவிட்டு, மேயரையும், மாநகராட்சி கமிஷனரையும் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு முன்பாகவே, அமைச்சர் கோகுல இந்திராவும், அமைச்சர் வளர்மதியும் காரில் ஏறி தப்பியுள்ளனர்.

தண்ணீரில் மூழ்கி தத்தளிக்கும் சென்னை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு:

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் மழை நீர் சூழ்ந்துள்ளதால் சென்னையே தண்ணீரில் மூழ்கியுள்ளது.

சென்னையில், வில்லிவாக்கம் அன்னை சத்யா நகரில் வீட்டுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்த பிறகே மறியல் கைவிடப்பட்டுள்ளது.

பெரம்பூர் ஜமாலியா பகுதியில் இடுப்பளவுக்கு மழை நீர் கரைபுரண்டு ஓடுகிறது.

ஓட்டேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கீழ்தளத்தில் உள்ள வீடுகள் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டதனால் அந்த வீடுகளில் வசித்தவர்கள் முதல் மாடியில் தஞ்சமடைந்துள்ளனர்.

கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், வியாசர்பாடி, வேப்பேரி, பூந்தமல்லி நெடுஞ்சாலை, எழும்பூர் வடக்கு ரயில் நிலையம், கோயம்பேடு, சேத்துப்பட்டு, கிண்டி, சைதாப்பேட்டை, அம்பத்தூர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

சேத்துப்பட்டு கெங்கு ரெட்டி சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

தண்டையார்பேட்டை மண்டல கட்டுப்பாட்டில் பகுதிகளில் மட்டும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

வியாசர்பாடி ரயில்வே பாலத்துக்கு கீழே கழுத்தளவுக்கு மழைநீர் தேங்கி நிற்பதால், மக்கள் நீந்தி செல்கின்றனர்.

புறநகர் ரயில்கள் அனைத்தும் மழையின் காரணமாக சிக்னல் பிரச்னையில் சிக்கி நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன.

சென்னையிலிருந்து திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, திருத்தணி, வேலூர் வரை செல்லும் மின்சார ரயில் சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக சென்னை நகரத்தில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

சென்னையில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஏரிகளை சரிவர தூர்வாராததால் பல கன அடி நீர் கடலில் கலந்து விரயமாகியுள்ளது.

மீட்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் பெயரளவுக்கு செயல்படுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நன்னீரில் உற்பத்தியாகும் டெங்குவை பரப்பும் ஏடிஎஸ் கொசுக்களின் தாக்கம் இனி அதிகரிக்கும் என்றும் இதனால் டெங்குவின் பாதிப்பு இருமடங்கு அதிகரிக்கும் எனவும் சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

-http://www.newindianews.com

TAGS: