கடலூரில் ரூ1,000 கோடிக்கு சேதம்… படுமந்தமாக நிவாரணப் பணிகள்.. கடும் கொந்தளிப்பில் பொதுமக்கள்

cuddalore-flood5678கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் ரூ1,000 கோடிக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் நிவாரணப் பணிகள் படு மந்தமாக இருப்பதால் பொதுமக்கள் கொந்தளித்து போயுள்ளனர்.

நிவாரணப் பணிகளை செய்துவருகிறோம் என முதல்வர் ஜெயலலிதா படத்தை முன்னிலைப்படுத்தி பேட்டி தருவதில் அக்கறை காட்டும் அமைச்சர்கள் 4 நாட்களாக பசியும் பட்டினியுமாக தவிக்கும் மக்களை பற்றி சிந்திக்காததால் அவர்கள் வீதிக்கு வந்து போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த 8-ந் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததால் பெரும் சேதம் ஏற்பட்டு மாவட்டத்தை தலைகீழாகப் புரட்டி போட்டுள்ளது. 2004 சுனாமி, 2011 தானே புயலின் கோரத் தாண்டவத்தை விட இந்த மழைவெள்ளம் கொடூர தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் ரூ1,000 கோடிக்கும் அதிகமாக சேதம் ஏற்பட்டிருக்கிறது என கூறப்படுகிறது.

இவ்வளவு பெரிய சேதத்துக்கு முதன்மையான காரணமாக சொல்லப்படுவது எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என்பதுதான். அத்துடன் பொதுப்பணித்துறையினரின் முதன்மை பணிகளாக ஆறுகளைத் தூர்வாருதல், முகத்துவார மண்களை சரி செய்தல் போன்றவற்றையும் செய்யாமல் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்ததுதான் மிகப் பெரிய சேதத்துக்கு அடிப்படை எனவும் குற்றம்சாட்டப்படுகிறது.

கடலூரில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது கெடிலம் ஆற்று திடீர் வெள்ளம்தான்.. கடந்த 8-ந் தேதியன்று கெடிலம் ஆற்றில் 20 அடி உயரத்துக்கு வெள்ளநீர் பாய்ந்தோடியுள்ளது.

ஆனால் அந்த சுவடு கூட தற்போது இல்லாமல் வெறுமையாக கெடிலம் ஆறு காட்சி தருகிறது. கல்வராயன் மலைப்பகுதிகளில் மழை பெய்தால் கெடிலம் ஆற்றில் வெள்ளம் ஏற்படும். இதை பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் அரசு நிர்வாகம் படுமோசமாக மெத்தனமாக முன்னெச்சரிக்கை அறிவிப்பு விடாமல் இருந்துள்ளது. கெடிலம் ஆற்றில் மரங்கள் வேர்பிடித்து நிற்கின்றன… இவற்றை அப்புறப்படுத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் போனதால் பாய்ந்து வந்த வெள்ளநீர் போக்கிடம் தெரியாமல் ஊருக்குள் பாய்ந்தது.

இதேபோல் பரவணாற்றிலும் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்துக்கு என்.எல்.சி. நிர்வாகமும் ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. என்.எல்.சி. சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீர் அனைத்தும் பரவணாற்றில் போய் சேருகிறது. இப்படி சேரும் போது நிலக்கரி படிமங்களும் பரவணாற்றில் படிந்து படிந்து அந்த ஆறு மண்மேடாகிவிட்டது..

இந்த ஆற்றின் நிலக்கரி படிமங்களை அகற்ற எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. கனமழை பெய்து கொண்டிருக்க பரவணாற்றில் மழை வெள்ளத்தோடு என்.எல்.சி. நிர்வாகம் வெளியேற்றிய நீரும் சேர்ந்து கொள்ள பெரும் பேரழிவை கடலூர் சந்திக்க நேரிட்டது. பண்ருட்டி அருகே வசூர் என்ற கிராமமே வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட அளவுக்கு பாதிப்பு இருக்கிறது.

இப்படி உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் போனதால் பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் நிவாரணப் பணிகளுக்காக அமைச்சர்கள், அதிகாரிகள் கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ளனர்.

ஆனால் தமிழக அரசு எதிர்பார்த்ததைவிட மிக மோசமான பாதிப்பு என்பதால் நிலைமையை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. முதலில் உயிரிழப்புகளையே சரியாக கணக்கவிடவில்லை என்ற புகாரும் முன்வைக்கப்படுகிறது. இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும் மேலும் பலரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நிவாரணப் பணிகள் உடனே மக்களைச் சென்றடையவில்லை என்பதால் நேற்று ஒரே நாளில் 30 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களில் ஈடுபட்டோரை அமைதிப்படுத்தாமல் ஈவிரக்கமின்றி தடியடி நடத்தியுள்ளது காவல்துறை. அதுவும் மாற்றுத் திறனாளிகளையும் போட்டு புரட்டி எடுத்துள்ளது போலீஸ்.

அதேபோல் கடலூரில் சுமார் ரூ1,000 கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வீடுகள், வேளாண் பயிர்கள், கால்நடைகள், மீன்பிடி படகுகள் என சேதங்கள் மிக மோசமாக ஏற்பட்டுள்ளது. இந்த சேத விவரங்கள் எப்போது கணக்கிட்டு பொதுமக்களுக்கு நிவாரண உதவி எப்போது சென்றடைவது? அரசு இப்போது கொடுக்கிற நிவாரண அரிசியில் புழுக்கள் நெளிகிற நிலைமை எனில் மக்களுக்கு நிவாரண உதவித் தொகை ‘களவாடப்படாமல்’ கொடுக்கப்படுமா? என்ற கேள்வியும் மக்களால் எழுப்பப்படுகிறது.

வாழ இடமின்றி உண்ண உணவின்றி நடுத்தெருவுக்கு நிறுத்தப்பட்ட மக்களிடம் காட்டும் இந்த ஆவேசத்தை நிவாரணப் பணிகளில் அரசு காட்டியிருந்தால் போராட்டங்களே நடந்திருக்காது.

கடலூர் பகுதியில் முகாமிட்டுள்ள அமைச்சர்கள் முதல்வர் ஜெயலலிதாவின் போட்டோ டிவியில் நன்றாக தெரியுமாறு வைத்துக் கொண்டு பேட்டியளித்துவிட்டால் மட்டும் போதுமா?

அரசின் அலட்சியத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்காத காரணத்தால் ஊரையும் உறவுகளையும் வாழ்விடங்களையும் தொலைத்துவிட்டு நிவாரணத்துக்கு கையேந்தும் மக்களிடம் போய் உரிய உதவிகளைச் சேர்க்க வேண்டிய அமைச்சர்கள் ஆலோசனை என்ற பெயரில் அறைகளில் அமர்ந்து கொண்டு அரசுக்கு முட்டுக் கொடுக்கிற பேட்டிகளைக் கொடுத்துவிட்டால் போதுமா? என்பதுதான் கடலூர் மக்களின் கேள்வி.

tamil.oneindia.com

TAGS: