பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தோல்வி: இந்தியா குற்றச்சாட்டு

un securityபயங்கரவாதத்துக்கு எதிரான திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தோல்வியடைந்துவிட்டதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஆண்டறிக்கை மீதான விவாதம், நியூயார்க்கில் உள்ள ஐ.நா. பொதுச் சபையில் வெள்ளிக்கிழமை

நடைபெற்றது. இதில் ஐ.நா. சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி அசோக்குமார் முகர்ஜி பேசியதாவது:

உலக நாடுகளுக்கு இடையே அமைதியை உண்டாக்கவும், பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்கி மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் உருவாக்கப்பட்ட அமைப்பே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆகும். அந்த அமைப்பு தற்போது வலுவானதாக இல்லை என்பதே ஒரு கசப்பான உண்மை.

பயங்கரவாதத்தை ஒடுக்க பல்வேறு திட்டங்களைப் பாதுகாப்பு கவுன்சில் இயற்றுகிறது. ஆனால், அவற்றை மற்ற நாடுகளில் செயல்படுத்தக்கூடிய திறன் இல்லாததால் அத்திட்டங்கள் வெறும் எழுத்தளவில் மட்டுமே இருக்கின்றன.

பயங்கரவாத நடவடிக்கைகளை புலனாய்ந்து விசாரணை நடத்தி தண்டிப்பதே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கடமை. அதுபோன்ற நடவடிக்கைகளில் பாதுகாப்பு கவுன்சில் ஒருபோதும் ஈடுபடுவதில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரியது. இதன் காரணமாக, சர்வதேச அளவில் அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது.

இவ்வாறு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் செயலற்றத் தன்மை தொடர்ந்தால், சர்வதேச நாடுகளின் நம்பகத் தன்மையை அந்த அமைப்பு விரைவில் இழந்துவிடும்.
ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் கருத்துகள், பாதுகாப்புக் கவுன்சிலால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.

அனைத்து உறுப்பு நாடுகளின் கருத்துகளையும், எண்ணங்களையும் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் ஏற்றுக்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றார் அசோக்குமார் முகர்ஜி.
ஐநா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் கிடைப்பதற்காக இந்தியா பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், அந்த அமைப்பின் மீதே இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

-http://www.dinamani.com

TAGS: