இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர வெளிநாட்டுப் பயணம் ஒரு புதிரான நடவடிக்கையாகவே அனைவராலும் பார்க்கப்படுகிறது.
இதுபற்றி எதிர்க்கட்சிகளும், மக்களும் ஊடகங்களும் நிறையவே விமர்சித்துக் கொண்டிருக்கின்றன.
இது போன்ற விமர்சனங்கள் இப்போது வெளிநாட்டினராலும் முன்வைக்கப்படுகிறது.
அதில் முக்கியமானதாக பிபிசியின் வணிக ஆசிரியர் கமல் அகமது சமீபத்தில் கூறியிருப்பதுதான், இந்திய பிரதமர் மோடி தனது நேரத்தை வெளிநாட்டுப் பயணத்திலே செலவிடுகிறார்.
விமான பயணமே அவருடைய வாழ்க்கையில் வழக்கமாகி விட்டது. இப்போது லண்டனின் விம்பிளி அரங்கத்தை அவர் எடுத்துக்கொண்டிருப்பது உட்பட அனைத்து பயணங்களுமே தொகுப்பாக ஆராயப்பட வேண்டியது என்று கூறியுள்ளார்.
பிரதமரான நாள் முதலாக நேபாளம், ஜப்பான், மங்கோலியா, பாரீஸ், சீனா, அமெரிக்கா என இதுவரை எந்த இந்திய பிரதமரும் போகாத அளவுக்கு குறுகிய காலகட்டத்தில் அதிக வெளிநாடுகளுக்கு சென்று கொண்டிருக்கிறார் மோடி.
தற்போது மூன்று நாள் சுற்றுப்பயணமாக பிரித்தானியா சென்றுள்ள போதுதான் கமல் அகமது மேற்கூறியவாறு விமர்சித்திருக்கிறார்.
விமர்சனங்களை சந்திப்பது ஏன்?
மோடி ஒரு இலக்கை ஏற்படுத்திக்கொண்டு அதை அடைய திட்டமிட்டு செயல்படுவதாகவே அரசியல் நோக்கர்கள் முதல் வாக்களித்த மக்கள் வரை நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட்ட எதிர்கட்சியினரும் பிரதமர் பொறுப்பிலிருக்கும் மோடி இந்தியாவை மறந்துவிட்டு வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது சரியல்ல என்று கொச்சைப்படுத்தி வருகின்றனர்.
சிவசேனா போன்ற கூட்டணி கட்சியினரும் பாஜவினரும் கூட மாட்டிறைச்சி போன்ற மத பிரச்சினைகளை எழுப்பி மோடிக்கு சிக்கலை ஏற்படுத்தி விடுகின்றனர். அதனால், மோடியின் கொள்கை நிலை என்ன என்பதை தெரிந்துகொள்ள பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.
மத அடிப்படையிலான கொள்கைவாதிகளின் நாகரீகமற்ற செயல்களுக்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை, அவ்வப்போது தனது கருத்தாக வெளியிட்டு மோடி தெளிவுபடுத்தினாலும் அந்த குற்றவாளிகளின் மீதான பலவீன நடவடிக்கை அவர்களை மீண்டும் செய்ய தூண்டுவதாகவே அமைகிறது.
அதற்கு மோடி மாநில அரசுதான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்வது சட்டப்படி சரியென்றாலும், மாநில அரசை அறிக்கையை தவிர, கண்டுகொள்ளாதிருப்பது தந்திர உபாயத்தை பாஜக கையாள்கிறதோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.
இதனால், பிற மதத்தவர்களின் ஆதிக்கம் உள்ள வெளிநாடுகளுக்கு செல்லும் மோடிக்கு, இவர் இந்துதுவா கொள்கையிலிருந்து வந்த நல்ல இந்தியரா? அல்லது இந்திய பிரதமராக இருந்தாலும் இந்துதுவா கொள்கைகொண்டவரா? என்று பார்க்கப்படுகிறது. அதன் ஒரு பிரதிபலிப்புதான் கமல் அகமதுவின் இந்த வசைபாடல்.
மோடியின் கனவு பலிக்குமா?
அதேவேளையில், இந்தியாவின் வளர்ச்சிக்கு மோடி நம்புகிற முதல் பிடிப்பு வெளிநாட்டு முதலீட்டாளர்களை அதிகமாக இந்தியாவில் தொழில் தொடங்க வழி செய்து கொடுப்பதுதான்.
அவர் செல்லும் ஒவ்வொரு நாட்டிலும் அதிகமாகவே தொழில் தொடங்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றன.
ஒப்பந்தங்கள் முடிந்து, தொழிற்சாலைகள் தொடங்கி, வேலைவாய்ப்புகள் உருவாகிய பிறகுதான் இந்த வெளிநாட்டு பயணத்தின் அறுவடையை அனுபவிக்க முடியும்.
60 ஆண்டு காலம் ஒரு கட்சி ஆட்சியை சகித்துக்கொண்டவர்கள். மோடியின் செயல்பாட்டிலும் போதிய காலம் பொறுத்தே தீர்வு பெற முடியும்.
அவர் பயணத்தின் போதும் மற்ற அமைச்சர்கள், அதிகாரிகள் மூலம் நிர்வாகம் செய்ய தொழில்நுட்ப வளர்ச்சி வழிகொடுக்கிறது.
வெளிநாட்டினரை கவரும் மோடி
அதுமட்டுமல்ல, இனிய அணுகுமுறையால் வெளிநாட்டினரோடு எளிதாக கலந்தும் விடுகிறார். அந்நாட்டின் பெருமையையும் ஏற்றுக்கொண்டு, இந்தியாவின் பெருமையையும் அங்கு பதிவு செய்கிறார். அதன் மூலம் அங்கு வாழும் இந்தியர்களுக்கும் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறார்.
உலக அரங்கில் பல நாடுகளுடன் இந்தியா பழக வந்திருக்கும் நிலையை உருவாக்கியுள்ளார். இது புதிய அணுகுமுறையாக இருப்பதால் விமர்சிக்கப்படலாம். பிறகு, இதுவே மகத்துவமாய் மற்ற நாடுகளுக்கும் முன்மாதிரியாகலாம்.
மேலும், இந்துதுவா கொள்கையின் பின்புலத்தில் உருவான மோடிக்கு வெளிநாடுகளுக்கு சென்று பல்வேறு இனம், மொழி, கலாச்சாரம் உள்ள மக்களை பார்த்து பழகும் வாய்ப்பால், ஒரு மனிதனின் சிறந்த அடையாளம் ஜாதி, மதமல்ல, மனித வளம் தான் என்பதை அனுபவ ரீதியாகவும் உணரக்கூடும். அது அனைத்து இந்தியரையும் காக்கும் வெண்கொற்ற குடையாய் மாறும்.
-http://www.newindianews.com