ஏரி, குளத்தை ஆக்கிரமித்தால் இதுதான் நடக்கும் என சரியான பாடம்… அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் செம “குட்டு”

chennai-rainசென்னை: தமிழகத்தில் பெய்து வரும் அடைமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளமானது ஏரி குளங்களை ஆக்கிரமித்தால் எப்படியெல்லாம் பாதிப்பு ஏற்படும் என சரியான பாடத்தை கற்றுத் தந்துள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் பாடம் நாராயணன் பொதுநலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், சென்னையில் மழைநீர் வடிகாலுடன் கழிவுநீர் இணைக்கப்படுவதால் அடைப்புகள் ஏற்படுகின்றன.

இந்த அடைப்புகளை மனிதர்களை வைத்து மாநகராட்சி நிர்வாகம் பழுது பார்க்கிறது. சென்னையில் பல வணிக வளாகம், அடுக்குமாடி கட்டிடங்களுக்கு சட்டவிரோதமாக கழிவுநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் விசாரித்தனர். அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டவிரோத கழிவுநீர் இணைப்புக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க விரைவில் சட்ட திருத்தம் கொண்டுவரப்படும் என்றார்.

அப்போது தலைமை நீதிபதி கவுல், ஏரிகள், குளங்கள், நீர்வழிகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டுவதால் எப்படியெல்லாம் பாதிப்பு வரும் என்பதை சென்னையில் தேங்கியுள்ள மழை வெள்ளம் நல்ல பாடமாக மக்களுக்கும், அரசுக்கும் கற்றுத்தந்துள்ளது.

அடுத்த பருவமழையின் போதாவது விழிப்புடன் செயல்பட வேண்டும். தற்போதைய நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அரசு முழுமையாக ஈடுபடவேண்டும் என காட்டமாக தெரிவித்தார். இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

tamil.oneindia.com

TAGS: