முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கு தாராளமாக செல்லலாம்… மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அஸ்ஸாம் ஆளுநர்

acharya-assamகவுகாத்தி: அஸ்ஸாம் மாநில ஆளுநர் ஆச்சார்யா, “இந்தியா இந்துகளுக்கானது” என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அது அடங்குவதற்குள் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு செல்லலாம் என்று கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.

அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று முன்தினம் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அம்மாநில ஆளுநர் ஆச்சார்யா ” இந்தியா இந்துகளுக்கானது” மற்ற நாடுகளில் இருந்து அடைக்கலம் தேடிவரும் இந்துக்களை ஏற்பதில் எந்தவிதமான தயக்கமும் இல்லை என பேசியது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய தனது கருத்துக்கு விளக்கமளித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கிக்கொண்டுள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது “இந்துகள் மட்டும் அல்ல பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற மற்ற நாடுகளில் உள்ள அனைத்து மதத்தினரும் இந்தியாவிற்கு வரலாம். இந்தியா பரந்த மனப்பான்மை கொண்ட நாடு. டாடா, கோத்ரேஜ், வாடியா போன்றவர்கள், தற்போது ஈரான் என்று அழைக்கப்படும் பெர்சியா நாட்டைச் சேர்ந்தவர்கள் தான். இந்தியா அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது. உலகிலேயே மிகவும் சகிப்புத் தன்மை கொண்ட நாடு இந்தியா தான்.

இங்குள்ள ஒவ்வொருவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதையும் மீறி இங்கு தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதும் முஸ்லிம்கள் தங்கள் விருப்பம் போல எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.

பெரும்பாலான முஸ்லிம்கள் ஏற்கெனவே பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டனர். அதுபோல பாகிஸ்தானுக்கு அல்லது வங்கதேசத்துக்கு செல்ல விரும்புகிறவர்கள் தாராளமாக செல்லலாம்” என்றார். அங்கு துன்பத்திற்கு ஆளானால் திரும்பவும் இந்தியாவிற்கு வரலாம். நாங்கள் அவர்களை அனுமதிப்போம்” என தெரிவித்துள்ளார். ஒரு சர்ச்சைக்குரிய கருத்திற்கு விளக்கம் அளிப்பதாக கூறி மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார் அசாம் மாநில ஆளுநர் பி.பி.ஆச்சார்யா.

tamil.oneindia.com

TAGS: