இந்திய தீவிரவாதிகளுக்கு மதிப்பே இல்லையாம்- ஐ.எஸ்.ஐ.எஸ்-சில் அரேபிய வீரர்களுக்கே முன்னுரிமை!

isis_boystatement_001இந்திய முஸ்லிம்கள் உள்பட தெற்காசிய நாடுகளிலிருந்து ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைவோரை, தற்கொலைப் படையாகவே அந்த இயக்கத்தினர் பயன்படுத்துவதாக சர்வதேச உளவுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் செயல்பாடுகளைக் கண்காணித்து வரும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உளவுத் துறை நிறுவனங்கள், அதுகுறித்து தகவல்களை இந்திய உளவுத்துறையிடம் அண்மையில் பகிர்ந்து கொண்டன.

அந்த அறிக்கையில், இந்தியர்கள் உள்பட தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களை ஐ.எஸ். இயக்கத்தினர் நடத்தும்விதம் குறித்து அதிர்ச்சியான தகவல்கள் கூறப்பட்டுள்ளன.

அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கியத் தகவல்கள் வருமாறு:

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் அரபு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே உயர்ந்த பதவிகள் வழங்கப்படுகின்றன. தெற்காசியா மற்றும் நைஜீரிய நாட்டினர் அங்கு மிகவும் மோசமான முறையில் நடத்தப்படுகின்றனர்.

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லீமக்ளை போரில் ஈடுபடுத்த தகுதியற்றவர்களாகவே ஐ.எஸ். அமைப்பு கருதுகிறது.

இதனால், ஐ.எஸ். முகாம்களில் எந்த வசதிகளுமற்ற சாதாரண கிடங்குகளிலேயே தெற்காசியர்கள் தங்க வைக்கப்படுகின்றனர். மேலும், இவர்களுக்கு மிகச் சொற்ப அளவு ஊதியம் மட்டுமே வழங்கப்படுகின்றன.

அதுமட்டுமின்றி, அரபு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு மட்டுமே நவீன ஆயுதங்களும், போர்க் கருவிகளும் வழங்கப்படுகின்றன. இந்தியர்கள் உள்ளிட்ட தெற்காசியர்களுக்கு சாதாரண ரக துப்பாக்கிகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.

அதேபோல், பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களின்போது தற்கொலைப் படையினராக மட்டுமே தெற்காசியர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். சில சமயங்களில், அவர்களுக்கு தெரியாமலேயே அவர்கள் தற்கொலைத் தாக்குதல்களுக்கு உள்படுத்தப்படுகின்றனர்.

பொதுவாக, வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு (பயங்கரவாதத் தாக்குதலுக்கு திட்டமிடப்பட்ட பகுதி) கொண்டு செல்லுமாறு அவர்களுக்கு (தெற்காசிய முஸ்லிம்கள்) உத்தரவிடப்படும். பின்னர், ஒரு தொலைபேசி எண்ணை அழைக்குமாறு அவர்களுக்குத் தகவல் அனுப்பப்படும். அவ்வாறு அந்த எண்ணை அழைக்கும்போது, முன்னரே வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பத்தின்படி அந்த வாகனம் வெடித்துச் சிதறும்.

இதேபோன்று, பல தாக்குதல்களை ஐ.எஸ். அமைப்பு அரங்கேற்றியுள்ளது. ஐ.எஸ். அமைப்பில் இணைந்த 23 இந்தியர்களில் 6 பேர் இதுபோன்ற சம்பவங்களில்தான் உயிரிழந்துள்ளனர். குரானில் போதிக்கப்பட்ட விஷயங்களில் இருந்து விலகிச் சென்றவர்களாகவே இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்களை ஐ.எஸ். அமைப்பினர் கருதுகின்றனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://www.dinamani.com

TAGS: