உறவினர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்: எஸ்.எம்.எஸ் மூலம் ”தலாக்” அனுப்பிய கணவன்

rape_002உத்தரபிரதேசத்தில் வாழும் முஸ்லிம் பெண்மணி ஒருவருக்கு துபாயில் வேலை செய்யும் அவரது கணவர் எஸ்.எம்.எஸ் மூலம் 3 முறை தலாக் அனுப்பி விவாகரத்து செய்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் 25 வயது பெண் ஒருவர் தனது 5 வயது மகனுடன், தன் மாமியாருடன் வசித்து வந்துள்ளார்.

அந்த பெண்ணின் கணவர் துபாயில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், அந்த பெண் தன்னுடைய உறவினர்கள் சிலரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தை அந்த பெண் தன் கணவரிடம் ஒரு நாள் தொலைப்பேசி மூலம் தெரிவித்துள்ளார்.

கணவர் தன் நிலையை உணர்ந்து ஆதரவாக இருப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அவரிடம் இருந்து வந்த குறுஞ்செய்தி அந்த பெண்ணை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அந்த குறுஞ்செய்தியில், மூன்று முறை ’தலாக்’ என்று அனுப்பப்பட்டுள்ளது.

ஷரியா சட்டப்படி 3 முறை தலாக் கூறினால் உடனடி விவாகரத்து என்ற பொருள் உள்ளதால், அந்த பெண் கடும் மனவேதனை அடைந்துள்ளார்.

இதையடுத்து அந்த பெண்ணின் மாமியார் தனது பேரனை மட்டும் தன்னோடு வைத்துக்கொண்டு தனது மருமகளை வீட்டை விட்டு விரட்டியுள்ளார்.

இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், நான் அந்த குறுஞ்செய்தியை படித்த போது என்னால் நடப்பதை புரிந்து கொள்ளவே முடியவில்லை.

திருமணமாகி 5 வருடமாக இணைந்து வாழும் எனது கணவரிடம், எனக்கு நடந்த கொடுமையை எடுத்துக்கூறியபோது அவர் எனக்கு ஆறுதலாக இருப்பார் என்று நான் எண்ணினேன்.

ஆனால் நான் தான் தவறாக எண்ணியுள்ளேன். அவர் கோழைத்தனமாக மிக எளிதான வழியை தேர்ந்தெடுத்து குறுஞ்செய்தி மூலம் தலாக் அனுப்பி விவாகரத்து செய்துவிட்டார்.

5 ஆண்டு திருமண முறையை 5 வினாடிகளில் சிதைத்துவிட்டார். நான் பலாத்காரத்திற்கு உள்ளான போது எனக்கு ஆதரவாக இருந்து என்னுடன் காவல் நிலையம் வந்து நடந்தவற்றை புகார் அளிக்க உதவிய எனது மாமியாரும் கடைசியில் அவரது மகனுக்கு ஆதரவாக செயல்பட்டுவிட்டார்.

ஒரே இரவில் நான் என் குடும்பத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டேன். மேலும், எனது ஒரே நம்பிக்கையான எனது மகனையும் என்னிடம் இருந்து பிரித்துவிட்டனர்.

இதனால் நான் உயிர் வாழும் ஆசையையும் முற்றிலுமாக இழந்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களில் பலர் சமீபகாலமாக தொலைபேசி, மொபைல் போன், வாட்ஸ் அப் போன்றவற்றை பயன்படுத்தி ’தலாக்’ கூறி தங்களது இணையை விவாகரத்து செய்து வருவது அதிகரித்து வருகிறது.

-http://www.newindianews.com

TAGS: