டெல்லி: உற்பத்தித் துறையின் வளர்ச்சி காரணமாக, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், இது சீனாவின் வளர்ச்சியை விட அதிகம் என்றும் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
இதன் மூலம், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இந்தியா, சீனாவை விஞ்சியுள்ளது. நடப்பு நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இது, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாவது காலாண்டை ஒப்பிடும்போது 0.4 சதவீதம் அதிகமாகும். இதே காலகட்டத்தில் சீனா, ரஷியா, பிரேசில் ஆகிய வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி முறையே 6.9, 4.1, 4.2 சதவீதமாக உள்ளது.
இதன் மூலம், உலக அளவில் பொருளாதாரத்தில் இந்தியாவுக்கு போட்டியாக விளங்கும் சீனாவை, இந்தியா விஞ்சியுள்ளது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறுகையில், “நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் எங்களுக்கு திருப்தி அளித்துள்ளது.
குறிப்பாக, உலக அளவில் பொருளாதாரத்தில் மந்தநிலை நிலவும் போதிலும், இந்தியாவில் உற்பத்தித் துறையின் வளர்ச்சி 9.3 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி, முந்தைய நிதியாண்டின் 7.3 சதவீதத்தைவிட அதிகமாக இருக்கும். வரும் நிதியாண்டுகளில் இது மேலும் உயரும் என்றார்.