தேனி: முல்லைப் பெரியாறு அணை உறுதியாக உள்ளதால் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என கண்காணிப்புக் குழு தலைவர் நாதன் தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அணையை கண்காணித்து பராமரிக்க, மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் நாதன் தலைமையில் மூவர் கொண்ட கண்காணிப்பு குழுவை நியமித்தது.
இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து 138 அடியைத் தாண்டியுள்ளது.
எனவே அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயரும்போது செய்யப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், உபரி நீரை வெளியேற்றுவதற்கு ஏற்ப அணையின் மதகுகளை சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளுக்காக துணைக் காண்காணிப்பு குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக அணையை ஆய்வு செய்து வருகின்றனர்.
பேபி அணை, பிரதான அணை மற்றும் 13 மதகுகளை ஆய்வு செய்த குழுவினர் அணையின் நீர்மட்டம், நீர்வரத்து, நீர்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு மற்றும் கசிவு நீர் வெளியேற்றம் போன்றவற்றை கண்காணித்தனர். அதன்பின் நேற்று மூவர் குழு அணைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வுக்குப் பின்னர் மூவர் குழுவின் தலைவர் நாதன் கூறுகையில், தற்போது முல்லைப் பெரியாறு அணையில் 138.80 அடி நீர் உள்ளது. அணை உறுதியாக உள்ளதால் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம். மத்திய நீர்வள ஆணையத்திடம் அனுமதி பெற்று 152 அடியாகவும் உயர்த்தலாம்.
தமிழக அதிகாரிகள் கொண்டு செல்லும் பொருட்கள் இனிமேல் தடுக்கப்பட மாட்டாது என்று கேரளா உறுதியளித்துள்ளது. அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும்போது பேபி அணையை பலப்படுத்த தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என்று கூறினார்.
முன்னதாக இந்த மூவர் குழுவினர் கடந்த ஜூன் மாதம் 22-ந்தேதி அணையில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். அதன்பிறகு துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வுகள் மேற்கொண்டு மூவர் கண்காணிப்பு குழுவிற்கு அறிக்கைகள் அளித்து வந்தனர்.
கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், அணையின் நீர்மட்டம் 133 அடியை தாண்டியது.
இதுதொடர்பாக துணை கண்காணிப்பு குழுவினர் மூவர் கண்காணிப்பு குழுவிற்கு தகவல் கொடுத்ததின் பேரில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.