டெல்லி: டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக ஆண்டுக்கு 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பதாக மத்திய அறிவியல் மற்றும் சூழலியல் மையம் ஒரு ரிப்போர்டை வெளியிட்டுள்ளது.
தற்போது உலக வெப்பமயமாதல், பருவ நிலை மாற்றங்கள், புவி வெப்பமயமாதல் போன்ற பிரச்சனைகள் உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன. இந்நிலையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை, வாகன எண்ணிக்கை உயர்வு போன்ற முக்கிய காரணங்களால் தலைநகர் டெல்லி பெருமளவில் மாசடைந்த நகரமாக மாறியுள்ளது.
இந்தப் புகை மாசுவால் சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இதைத் தடுக்க டெல்லி அரசு வாகன குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், சுற்றுச்சுழலுக்கும் உடல் நலத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து மத்திய அறிவியல் மற்றும் சூழலியல் மையம் ஆய்வு நடத்தியது.
இதில், தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் புகை, வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகை, வீடுகளில் சமையல் செய்யும்போதும் வெளிப்படும் புகை, அதனால் ஏற்படும் வெளிப்புற காற்று மாசுபாடு, உட்புற காற்று மாசுபாடு ஆகியவற்றை கொண்டு இந்த ஆய்வினை மேற்கொண்டது. அந்த ஆய்வின் அறிக்கையை சூழலியல் மையம் இன்று வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையின்படி, 2000-ம் ஆண்டில் 8 லட்சமாக இருந்த டெல்லியின் மக்கள் தொகை 2012-ம் ஆண்டில் 32 லட்சமாக ஆகியுள்ளது. கடந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தால் உலகில் மிகவும் மாசடைந்த நகரமாக அறிவிக்கப்பட்ட டெல்லியில், காற்று மாசுபாட்டினால் ஆண்டுக்கு 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை உயிரிழப்பு ஏற்படுவதாக தெரிவித்துள்ளது.
மேலும் ஒரே நேரத்தில் ஏற்படும் வானிலை மாற்றம், காலநிலை மாற்றம் ஆகியவற்றால் இந்தியாவில் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் அதிகமாக ஏற்படுவதாகவும் மத்திய அறிவியல் மற்றும் சூழலியல் மையம் கூறியுள்ளது.
-http://tamil.oneindia.com