சென்னை குப்பையை சுத்தம் செய்ய வந்து உயிரை இழக்கும் வெளியூர் துப்புரவு தொழிலாளர்கள்

chennai_cleaningசென்னை: பணிச்சுமை, சரியான உணவு, தூக்கமின்றி சென்னை நகரை சுத்தம் செய்வதால் துப்புரவு தொழிலாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். துப்புரவு பணிக்கு வந்த பழனிச்சாமி என்ற ஊழியர் மரணமடைந்த நிலையில் ஏராளமான துப்புரவு பணியாளர்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் 2ம் தேதி அதிகாலை வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்தது. ஏரிகள், குளங்கள் உடைந்ததாலும், நிரம்பி வழிந்த ஏரிகளில் இருந்து உபரிநீர் திறந்து விட்டதாலும் சாலைகள் வெள்ளக்காடானது. ஏராளமான வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து வீடுகளில் வசிக்க முடியாமல் முகாம்களில் தஞ்சமடைந்தனர். வெள்ளம் வடிய வடிய மக்கள் வேறு சிக்கலை எதிர்கொள்ளத் தொடங்கினர். சென்னையில் வெள்ளம் புகுந்த வீடுகளில் ஏராளமான குப்பைகள் தேங்கின. குப்பைகளை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மட்டுமின்றி தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினரும் ஈடுபட்டனர். இருப்பினும் அவர்களால் முடியாத காரணத்தால் வெளி மாவட்டங்களில் இருந்தும் துப்புரவு தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு துப்புரவு பணியை மேற்கொண்டனர்.

வெளி மாவட்டங்களில் இருந்து துப்புரவுத் தொழிலாளர்கள் 1,385 பேரும், துப்புரவுத் துறை அதிகாரிகள் 122 பேரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இப்படி அழைத்துவரப்பட்ட துப்புரவுத் தொழிலாளர்களுக்கு எந்த வசதியும் செய்துகொடுக்காமல் விலங்குகளைப்போல நடத்தப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

இதில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த ஊரப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி,42, கொடுமுடி நகராட்சியில் துப்புரவு ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் உள்பட ஈரோடு மாவட்டத்தில் 300 பேர் மழையால் புரட்டி போட்ட வெள்ளச்சேதங்களை அப்புறப்படுத்த சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். இவர்கள், திருவான்மியூர் மற்றும் கொட்டிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தனர். கடந்த 9ம் தேதி திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி பள்ளி நிவாரண முகாமில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது பழனிச்சாமி திடீரென மயங்கி விழுந்து காயமடைந்தார். மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இறந்து போன பழனிச்சாமியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று துப்புரவு தொழிலாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் இறந்து போன துப்புரவு தொழிலாளி பழனிச்சாமியின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆதிதமிழர் பேரவையினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பழனிச்சாமியைப் போல பல இடங்களில் துப்பரவு பணிக்கென அழைத்துவரப்பட்ட ஊழியர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். துாய்மைப் பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு பூட்ஸோ, கை உறையோ, முகத்தை மறைக்கும் உறையோ வழங்காமல் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவர்களது வாழ்வாதாரம் அவர்கள் பார்க்கும் வேலையை வைத்துதான். ஆனால் பல இடங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஒப்பந்ததாரர்கள் சரியான முறையில் சம்பளம் வழங்குவதில்லை. கேட்டால் சம்பந்தப்பட்ட அரசு துறை எங்களுக்கு ஒப்பந்த தொகையை வழங்கவில்லை. அதனால் எங்களால் வழங்க இயலவில்லை என்று தட்டி கழிப்பதாகவும் கூறப்படுகிறது.

துப்புரவு தொழிலாளர்கள் தினமும் வேலைக்கு சென்றால்தான் அவர்களது குடும்பம் காலத்தை ஓட்டும். அப்படி இருக்கையில் அவர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் இழுத்தடித்தால் எப்படி? மேலும், அவர்களை எப்படி வேண்டுமானாலும் வேலை வாங்கலாம் என நினைத்து இரவு, பகல் பாராமல் அவர்களை வேலை வாங்க கூடாது. அவர்களும் மனிதர்கள் தான் என்ற எண்ணத்தை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களுக்கான வேலைகளை அந்தந்த நேரங்களில் மட்டும் வழங்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கும் வேலையின்போது வழங்கப்படும் கையுறை, செருப்பு உள்ளிட்ட பொருட்களை முறையாக வழங்க வேண்டும். மேலும் அவர்களை அழைத்து வந்து வேலை வாங்குவது மட்டுமின்றி, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், அவர்கள் தங்குவதற்கு இடம், உணவு, ஆடைகள் ஆகியவற்றை வழங்க வேண்டும். அப்படி வழங்கினால்தான் அவர்களும் நிம்மதியாக வேலையை செய்ய முடியும். அவர்களை நம்பியுள்ள குடும்பமும் செழிக்கும். இதை அரசாங்கம் முறையாக செய்ய வேண்டும்.

சென்னை தெருக்களில் குவிந்த லட்சக்கணக்கான டன் குப்பைகளை அகற்ற வந்த தொழிலாளர்களின் வாழ்க்கையை அழுக்காக்குவதோடு அவர்களை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்தக்கூடாது என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. அவர்களது மனது எந்த விதத்திலும் பாதிக்காத வகையில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும்வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

TAGS: