சென்னை: சென்னைக்கு அருகே திருநின்றவூரில் இன்னும் வெள்ள நீர் வடியாமல், தெருக்கள் மற்றும் வீடுகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்தாண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக மழை தந்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் பெய்த கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்தன. குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து விட்டதால், மக்கள் வீடுகளுக்குத் திரும்பி விட்டனர். மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.
இந்த சூழ்நிலையில், சென்னைக்கு அருகே திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் இன்னும் வெள்ள நீர் வடியாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வீடுகளில் வசிக்க முடியாமல் இப்பகுதி மக்கள் பெரும் அவதிப் பட்டு வருகின்றனர்.
வீடுகள் மற்றும் தெருக்களில் இடுப்பளவு தண்ணீர் நிற்பதால், பலர் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. ஏரிகள் தூர்வாரப் படாததும், தண்ணீர் செல்லும் பாதைகளில் ஆக்கிரமிப்புகளுமே வெள்ள நீர் இன்னும் வடியாததற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
இன்னும் வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு வராத தங்களுக்கு உணவைத் தவிர வேறு நிவாரண உதவிகள் ஏதும் கிடைக்கவில்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. விரைந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வெள்ள நீரை வடியச் செய்ய வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை ஆகும்.
தற்போது வெள்ள நீருடன், கழிவுநீரும் கலந்துள்ளதால் பல நோய்கள் பரவி வரும் அபாயமும் இப்பகுதியில் உள்ளது. முக்கியமாக அதிகளவு கொசுக்கள் உற்பத்தி ஆவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
திருநின்றவூர் பெரிய ஏரியானது சுமார் 800 ஏக்கர் பரப்பளவையும், மீன் வளத்தையும் கொண்டது. இந்த ஏரியின் மூலம் சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. சமீபத்தில் பெய்த கனமழையால் இந்த பெரிய ஏரியானது முழுக் கொள்ளளவையும் எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏரியில் மீன்பிடித் தொழில் நடந்து வருகிறது. அதனாலேயே ஏரி தண்ணீரை வெளியே போக விடாமல் சிலர் தடுப்பதாக குற்றச்சாட்டும் உள்ளது.