தனி ஒருவனாய் காடு வளர்த்த நிஜ நாயகன் (வீடியோ இணைப்பு)

firestman_001வட இந்தியாவின் அஸ்ஸாம் பகுதியில், 1,360 ஏக்கர் பாலை நிலப்பரப்பில் மரங்கள், புதர்செடிகள், ஊர்வன, பறவைகள், விலங்குகள் என ஒரு காட்டையே உருவாக்கி தனியொருவனாக, பெரிய இயற்கை வளத்தையே படைத்துள்ளார் இந்தியன் ஜாதவ் பாயெங்.

இயற்கை சமநிலையை பாதுகாக்கும் சுற்றுச்சூழல் பங்களிப்பில் இப்போது முக்கியமாக உள்ள மோலாய் காடுகள். 30 வருடங்களுக்கு முன்னால், தாவரங்களை நிழலுக்கு கூட பார்க்க முடியாத மணல் திட்டுகளாக கிடந்தது.

பாயெங் 16 வயது சிறுவனாக இருந்தபோது, அவர் வீட்டுக்கு அருகாமையான இந்த பகுதியில் பெரிய வெள்ளம் ஏற்பட்டு, பிறகு தண்ணீர் வடிந்த நிலையில், வெள்ளத்தால் அடித்துவரப்பட்ட பாம்புகள் உட்பட ஏராளமான ஊர்வன உயிரினங்கள் கரைசேர்ந்த இந்த பகுதியில் பசுமையே இல்லாததால் சரியான வாழ்விடம் கிடைக்காமல் வெயிலில் சுருண்டு மணலில் இறந்து கிடந்தன.

இந்த சம்பவம் அழும் அளவுக்கு பாயெங் மனதில் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது.

‘அப்போது, நான் வன துறையை தொடர்புகொண்டேன், மரங்கள் இல்லாததால் மற்ற உயிர்களும் அங்கு வாழ முடியாததை விளக்கினேன்.

மேலும், இனியாவது இங்கு மரங்கள் வளருங்கள் என வேண்டினேன். அதற்கு, அந்த மணல் பாலையில் எந்த மரமும் வளராது, வேண்டுமானால் மூங்கிலை மட்டும் வளர்க்க நீயே பொறுப்பு எடுத்துக்கொள் என்றனர்.

என் புரிதலுக்கு பொருத்தமாக அவர்கள் பதில் இல்லை. கலங்கினேன். காடு வளர்க்க நானே முடிவு செய்தேன். அவசியமானதாக அதை எடுத்துக்கொள்ளாததால், எனக்கு உதவ யாரும் முன்வரவில்லை.’ என நாளிதழ் ஒன்றுக்கு தற்போது பேட்டியளித்துள்ளார் ஜாதவ் பாயெங்(47).

அந்த பகுதி முழுவதும் பலவகை மரங்கள் , செடிகளுக்கான விதைகளை விதைத்து வளர்த்தார். மரங்கள் வளராது என்ற அவநம்பிக்கை தளர்த்தெறிந்ததன் காரணமாக மரங்கள் செழித்து வளர்ந்தது.

இதற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து முழுநேர பணி செய்தார். இயற்கையில் எல்லாமே ஒன்றை ஒன்று சார்ந்துள்ளதை ஒரு ஞானமாகவே புரிந்திருந்தார் பாயெங்.

அதனால், தாவரங்களுக்கு உதவியாக எறும்பு முதல் சகலமான ஊர்வன உயிர்களை அங்கு கொண்டுவந்தும் வளரவிட்டார்.

பறவைகள், மான்கள், காண்டாமிருகங்கள், யானைகள், புலிகள் போன்ற விலங்குகளும் அங்கு இருப்பதால், ஒரு காட்டிற்கான நிறைவான சூழல் திட்டமிட்டே கிடைத்துள்ளது.

16 வயதினிலே இயற்கையின் அவசியத்தை உணர்ந்து, அங்கு காடு வளர்க்க ஆர்வம் கொண்டது ஆச்சரியம்.

1979 ம் ஆண்டில் ஆரம்பித்த இந்த பணி 2008 ம் ஆண்டில்தான் வெளி உலக கவனத்தை ஈர்த்தது.

ஒரு காட்டுக்கான சூழல் போதுமானதாக ஒருவேளை இல்லாதிருந்தாலும் இந்த பெருமுயற்சி பாராட்டுக்கு உரியது என, அரசு வனத்துறையாலும் வேறு சில அமைப்புகளாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

’பாயெங்கை வியக்கிறோம். 30 ஆண்டுகால இந்த காடு வளர்ப்பு முயற்சியை வேறுநாட்டில் செய்திருந்தால் நாயகனாக (Hero) கொண்டாடுவார்கள்’ என வனத்துறை உதவி பாதுகாப்பாளர் குனின் சாய்கியா கூறுகிறார்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரை போல ஒரு பசுமை பிரியன்.

பாம்புகள் இறந்ததை பார்த்து, அதற்கு காரணமான இல்லாத காடுகளையே உருவாக்கி, வெறுமையையே தண்டித்திருக்கும் ஒரு வினோத தர்மன்.

இயற்கையே இவரிடம் நன்றிக்கடன் பட்டிருக்கும்போது, மனிதர்கள் அதை மதிப்பிடவும் பாராட்டவும் அளவுகோள்.

-http://www.newindianews.com

TAGS: