தமிழக – கேரள எல்லையில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் கேரள மாநிலம் பாலக்காடு, மலப்புரம், வயநாடு வனப்பகுதியில் போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் தீவிரதேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
மலப்புரம் மாவட்டம், நிலம்பூர் அருகே காளிகாவு வனச்சரகத்தில், பூத்தோட்டம் கடவு பகுதியில் உள்ள வனத்துறை புறக்காவல் நிலையம் மீது 10 மாவோயிஸ்கள் நேற்று முன்தினம் இரவு திடீர் தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த வன கண்காணிப்பாளர்கள் அஜயன், கிரீசன், மணிகண்டன் ஆகியோரை கடத்தி சென்றனர். அருகில் உள்ள சைலன்ட்வேலி வனத்துறைபுறக்காவல் நிலையத்திற்கு மாவோயி ஸ்ட்கள் தீ வைத்து வன வாட்சர் அலி மற்றும் அவரது நண்பர் ஹைதர்அலியையும் வனப்பகுதிக் குள் கடத்தி சென்றனர்.
மாவோயிஸ்ட்கள் கடத்தி சென்று பின் விடுவிக்கப்பட்ட வனவாட்சர் மணிகண்டன் கூறியதாவது: நேற்று முன்தினம் மாவோயிஸ்ட்கள் வனபுறக்காவல் நிலையத்திற்கு வந்தனர். அவர்களில் 2 பேர் பெண்கள். 7 பேர் உள்ளே வந்து எங்களை வெளியே நிற்குமாறு கூறினர். இதன்பிறகு எனது பைக்கில் இருந்து பெட்ரோலை எடுத்து தீப்பந்தத்தில் கொளுத்தி வனப்புறக்காவல் நிலையம் மீது வீசினர். இதில் புறக்காவல் நிலையம் தீப்பிடித்து எரிந்தது. அதன்பிறகு அந்த கும்பல் அருகில் உள்ளசைலன்ட் வேலி வனத்துறைபுறக்காவல் நிலையத்தையும் சூறையாடியது.
எங்களையும் அங்கிருந்த 2 பேரையும் கடத்தி கொண்டு சென்றனர். எங்களை தண்டர்போல்ட் வீரர்கள் என அவர்கள் கருதினர். ஆனால் சாதாரண வன வாட்சர் என தெரியவந்ததால் எங்களை விடுவித்தனர். காக்கி சட்டைஅணிந்து காட்டுக்குள் யாராவது வந்தால் அவர்களை சுட்டுக்கொல்வோம் என்று கூறி சென்று விட்டனர். இவ்வாறு அவர் கூறினர்.
தமிழக-கேரளா எல்லை வனப்பகுதியில் நடமாடும் மாவோயிஸ்ட்களை ஒடுக்க இரு மாநில போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக தமிழக எல்லையோரம் உள்ள நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவில் தேவாலா, சேரம்பாடி, எருமாடு, அம்பலமூலா, நெலாக்கோட்டை மற்றும் தேவர்சோலை ஆகிய காவல்நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு மாவோயிஸ்ட் கும்பல் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சோதனை சாவடிகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரபடுத்தப்பட்டு உள்ளது. மேலும், காவல்நிலையங்கள் அருகே கண்காணிப்பு கோபுரங்கள் (வாட்ச் டவர்) அமைக்கும் பணி நடந்து வருகிறது. பந்தலூர் அருகே அம்பலமூலா காவல்நிலையத்திற்கு அருகே கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
-http://www.nakkheeran.in