இந்திய பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தின் போது, தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் 5, 6-வது அணு உலைகளை அமைப்பது தொடர்பாக உடன்பாடு ஏற்படும் எனத் தெரிகிறது.
அதிகமான அணு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நோக்கில் ஏற்கெனவே அணு உலை செயல்படும் இடங்களில், மேலும் அணு உலைகளை அமைப்பதற்கு இந்திய அரசு முயற்சித்து வருகிறது.
இதன்படி திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் ஏற்கெனவே உள்ள அணு உலைகளுடன் மேலும் இரு அணு உலைகள் அமைப்பது தொடர்பாக ரஷ்ய நாட்டுடன் ஒப்பந்தம் செய்யப்படும் எனத் தெரிகிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகிற 23, 24 தேதிகளில் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது அவர் கூடங்குளத்தில் 5, 6-வது அணு உலை அமைப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் எனத் தெரிகிறது.
இதற்கு முன்னோட்டமாக, ரஷ்ய அணுசக்தி துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி நிகோலாய் ஸ்பாஷ்கி கடந்த 7 மற்றும் 8 தேதிகளில் இந்தியா வந்து, இந்திய அணுச்சக்தி துறை செயலர் சேகர் பாஸுவைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, கூடங்குளத்தில் இயங்கி வரும் முதலாவது அணு உலையை முறைப்படி பெற்றுக் கொள்வது, இரண்டாவது அலகில் குறைந்தப்பட்ச மின் உற்பத்தி, 3,4-வது அணு உலை கட்டுமானத்தை தொடங்குவது, 5, 6-வது அணு உலைகளுக்கான ஒப்பந்தம் ஆகியவை குறித்து விவாதித்ததாகத் தெரிகிறது.
புதிதாக அமைக்கப்படும் 5, 6-வது அணு உலைகள், ஏற்கெனவே உள்ள வி.வி.இ.ஆர். தொழில்நுட்பத்தில் அமைக்கப்படும் எனத் தெரிகிறது.
அணு உலை அமைப்பத்தில் மத்திய அரசு புதிய கொள்கை முடிவை எடுத்துள்ளது. இடப்பற்றாக்குறை, பணியாளர் குடியிருப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட காரணிகளை கருத்தில் கொண்டு, ஏற்கெனவே அணு உலை செயல்படும் இடங்களில் மேலும் அணு உலைகளை அமைப்பது என அரசு தீர்மானித்துள்ளது.
மேலும் புதிதாக அணு உலை அமையவிருக்கும் இடங்களில் உள்ளூர் மக்களின் கருத்து கேட்புக் கூட்டங்களை நடத்துவது தவிர்க்கப்படும். உள்கட்டமைப்பு செலவும் குறையும் என அரசு கருதுகிறது.
-http://www.dinamani.com