மதுரை: மதுரையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு கண்டிப்பாக தடை விலக்கப்படும் என்ற நம்பிக்கையில் காளைகள் படுவேகமாக தயார்படுத்தப்பட்டு வருகின்றன.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு ஆண்டு தோறும் ஜனவரி 17 ஆம் தேதியும், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பொங்கல் தினத்தன்றும், பாலமேடு ஜல்லிக்கட்டு பொங்கல் தினத்திலும் நடத்தப்பட்டு வந்தது.
கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், காளைகள் அதிகளவில் துன்புறுத்தப்படுவதாகவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததன் காரணமாக இந்த விளையாட்டுக்கு தடை ஏற்பட்டது.
இதனால் கடந்த ஆண்டு பொங்கலின்போது ஜல்லிக்கட்டு நடத்தப்பட முடியாமல் போனது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மத்திய அரசு காளைகளை துன்புறுத்தக் கூடாத வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்கி உரிய உத்தரவை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக நாடாளுமன்றத்தில் சிறப்பு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்பது ஜல்லிக்கட்டு ஆர்வலர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது. பாஜக அரசைச் சேர்ந்த சில அமைச்சர்களும் ஜல்லிக்கட்டுக்கு தடை நீங்கும் என்று பேசி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள கட்சிகளும் கூட ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளன. இதனால் தடைபட்ட ஜல்லிக்கட்டு எப்படியாவது இந்த பொங்கல் தினத்தில் நடக்கும் என்ற நம்பிக்கை ஜல்லிக்கட்டு வீரர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதற்காக மதுரை மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் உரிய பயிற்சி கொடுத்து தயாராகி வருகிறது.