இன்னும் 10 வருடங்களுக்கு பிறகு பெங்களூரில் மக்கள் வாழ முடியாது: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

bangaloreகுடிநீர் தட்டுப்பாடு இதேபோல தொடர்ந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் பெங்களூர் நகரில் இருந்து மக்கள் கூட்டம், கூட்டமாக வெளியேறும் நிலை வரும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன. ஐடி நிறுவனங்களின் அதிகரிப்பு காரணமாக, பெங்களூரின் புறநகர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் மிக அதிகமாக பெருகிவிட்டன. தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலத்தவர்களே அதிகம் குடியேறி வருகிறார்கள். காவிரி நதி நீரில் தமிழகத்திற்கு கொடுத்ததுபோக, எஞ்சியுள்ள நீரில் பெங்களூருக்கு கிடைக்கும் பங்கு சொற்பமே. எனவே, புதிய குடியிருப்புகள் போர்வெல் நீரையே நம்பியுள்ளன.

குறிப்பாக, சர்ஜாப்பூர் ரோடு, பெல்லந்தூர், ஒயிட்பீல்டு, மாரத்தஹள்ளி, எலஹங்கா, பன்னேருகட்டா ரோடு போன்ற பகுதிகளில், அதிகப்படியான அடுக்குமாடி குடியிருப்புகள், போர்வெல்லை மட்டுமே நம்பியுள்ளன. போர்வெல்லில் நீர் காலியானால் புதிதாக தோண்டுகிறார்கள், அல்லது தனியார் வாகனங்களை கொண்டு தண்ணீரை நிரப்புகிறார்கள்.

1980களில் 30 அடியிலேயே தண்ணீர் கிடைத்துவந்தது பெங்களூரில். ஆனால், தற்போது 1000 அடிக்கு மேல் போர்வெல்கள் போடப்படுகின்றன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

பெங்களூரு நகரின் நிலை குறித்து கர்நாடக முன்னாள் கூடுதல் தலைமை செயலாளர் வி.பாலசுப்ரமணியன் நடத்திய ஆய்வில் பெங்களூரு நகரில் தற்போதுள்ள குடிநீர் தட்டுப்பாடு மேலும் தொடர்ந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் தண்ணீரின்றி மக்கள், கூட்டமாக வெளியேறும் நிலை உருவாகும் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.

நிலத்தடி நீரை அதிகப்படுத்தாவிட்டால் 2025ம் ஆண்டுக்கு பிறகு பெங்களூர் மக்களுக்கு பெரும் பிரச்சினை என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது. இதன்பாதிப்பு பெங்களூரின் அருகிலுள்ள தும்கூர், கோலார், சிக்பள்ளாப்பூர், ராம்நகர் போன்ற நகரங்களிலும் எதிரொலிக்கிறது.

பெங்களூர் சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு ரூ.1000 கோடியில் குடிநீர் கொண்டுவரும் எத்தினஹொலே திட்டத்தை ஒரு சாரார் எதிர்த்து போராட்டம் நடத்திவருவதால் இன்னும் திட்டம் நிறைவேறவில்லை. அந்த திட்டம் நிறைவேறினாலும், பெங்களூருக்கு, காவிரியில் இருந்து கூடுதல் பங்கு கேட்டால் மட்டுமே பெங்களூர் தப்பிக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

tamil.oneindia.com

TAGS: