கலாம் நினைவிடம்.. பெரும் தாமதத்திற்குப் பின்னர் வேலையில் இறங்கிய மத்திய அரசு

kalam-memorialமறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு நினைவிடம் அமைப்பதில் நிலவி வந்த பெரும் தாமதத்திற்குப் பின்னர் தற்போது வேலையில் இறங்கியுள்ளது மத்திய அரசு. தற்போது கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தைச் சுற்றிலும் வேலி போடும் வேலையை அதிகாரிகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

டாக்டர் அப்துல் கலாம் கடந்த ஜூலை 27ம் தேதி மரணமடைந்தார். அவரது உடல் பிறந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு அருகே உள்ள பேய்க்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு நினைவிடம் அமைக்கப்படும் என பிரதமர் மோடியும், மத்திய அரசும் உறுதியளித்திருந்தனர். இதற்கான இடத்தையும் தமிழக அரசு ஒதுக்கியிருந்தது. இருப்பினும் கலாம் நினைவிடம் அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை.

இதனால் கலாம் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் அசுத்தமாக காணப்பட்டது. இதைக் கண்டு கலாம் குடும்பத்தினர் வேதனை அடைந்தனர். உடனடியாக நினைவிடம் தொடங்கப்பட வேண்டும் என்று ஆன்லைன் கையெழுத்து இயக்கத்தில் குதித்தனர். இதனால் மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு கேட்ட கூடுதல் இடத்தையும் தமிழக அரசு ஒதுக்கிக் கொடுத்தது.

இதையடுத்து நினைவிடம் தொடர்பான பணிகளை மத்திய அரசு தற்போது தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக வேலி அமைக்கும் வேலைகள் தொடங்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து டாக்டர் கலாமின் அண்ணன் பேரன் ஷேக் சலீம் கூறுகையில், கட்டுமானப் பொருட்கள் வந்து சேர்ந்துள்ளன. வேலி அமைக்கும் பணிகள் 15 நாட்களில் செய்து முடிக்கப்படும் என மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். நினைவிடப் பணிகளை தொடங்கியுள்ளதற்காக மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் கலாம் குடும்பத்தினர் சார்பில் நன்றி கூறிக் கொள்கிறேன் என்றார்.

tamil.oneindia.com

TAGS: