பதன்கோட்: பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப் படை தளத்துக்குள் ராணுவ சீருடையுடன் நுழைந்து பயங்கரவாதிகள் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டன.
இம்மோதலில் 2 விமானப் படை வீரர்களும் உயிரிழந்தனர். பஞ்சாப் மாநிலம் பதன் கோட் விமானப் படை தளத்துக்குள் ராணுவ சீருடையுடன் 2 தீவிரவாதிகள் இன்று அதிகாலை 3.30 மணியளவில் உள்ளே நுழைந்தனர். அவர்கள் திடீரென ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் மூலம் கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து பதிலடி கொடுத்த விமானப் படையினர் 2 தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்றனர். முன்னதாக பாகிஸ்தானில் இருந்து பதன்கோட் மாவட்டத்துக்குள் ஊருவிய இந்த தீவிரவாதிகள் இகாகார் சிங் என்பவரை சுட்டுக் கொலை செய்திருந்தனர்.
பின்னர் குருதாஸ்பூர் போலீஸ் எஸ்.பி. சல்வீந்தர்சிங்கின் அலுவலக வாகனத்தை துப்பாக்கி முனையில் கடத்தி அதன் மூலமாக விமானப் படை தளத்துக்குள் ஊடுருவியிருந்தது தெரியவந்தது.
இந்த வாகனம், பஞ்சாப்- ஹிமாச்சல பிரதேச எல்லையில் அதாவது விமானப் படை தளத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட 4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டனர்.
மேலும் இம்மோதலில் 2 விமானப் படை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். இச் சம்பவத்தைத் தொடர்ந்து அனைத்து ராணுவ நிலைகளும் மிகவும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தீவிரவாதிகள் வேறு எங்கும் பதுங்கி உள்ளன எனவும் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெல்லியில் இது தொடர்பாக அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இதுபோன்ற தாக்குதல் நடத்தப்படக் கூடும் என்று உளவுத்துறை முன்னெச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் பஞ்சாப்பின் குருதாஸ்பூரில் இதேபோல் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தியிருந்தனர். அதில் மொத்தம் 7 பேர் பலியாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.