டெல்லி: பதன்கோட் தீவிரவாதத் தாக்குதலில் இன்று மேலும் 4 பாதுகாப்புப் படையினர் மரணமடைந்தனர். இவர்களையும் சேர்த்து இதுவரை 7 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமானப்படைத் தளத்தை நேற்று பாகிஸ்தானிலிருந்த ஊடுறுவி வந்த ஐந்து தீவிரவாதிகள் தாக்கினர். அவர்களைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் தீவிர எதிர்த் தாக்குதலில் ஈடுபட்டனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த மோதலில் ஐந்து தீவிரவாதிகளையும் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவத்தில் நேற்று 3 பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்தனர். பலர் காயமடைந்திருந்தனர். இந்த நிலையில் விமானப்படைத் தளத்தில் வெடிகுண்டுகள் இருக்கிறதா என்ற சோதனையில் இன்று பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தபோது கிரெனட் குண்டுகள் வெடித்து 4 வீரர்கள் காயமடைந்தனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பாதுகாப்புப் படையினரில் நான்கு பேர் இன்று அடுத்தடுத்து மரணமடைந்தனர். அவர்களில் ஒருவர் தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த லெப்டினென்ட் கர்னல் ஆவார். பாதுகாப்புத்துறை இந்தத் தாக்குதலை வெளியிட்டுள்ளது. மற்றவர்களில் ஒருவர் விமானப்படையைச் சேர்ந்தவர் என்றும், மற்றவர்கள் ராணுவத்தினர் என்றும் தெரிய வந்துள்ளது.
பதன்கோட் விமான தளத்திற்குள் மேலும் 2 தீவிரவாதிகள்.. உயிருடன் பிடிக்க ராணுவம் தீவிரம்
பதன்கோட்: பஞ்சாப் மாநிலம் பதன்கோட் நகரில் உள்ள விமானப்படைத் தளத்திற்குள் இன்னும் 2 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து இருவரையும் உயிருடன் பிடிக்க பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தற்போது மீண்டும் அங்கு துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்பதாகவும், தீவிரவாதிகளை உயிருடன் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாதுகாப்புப் படையினர் செயல்பட்டு வருவதாகவும் தகல்கள் வெளியாகியுள்ளன.
2 தீவரவாதிகள் உள்ளே பதுங்கியிருப்பதை எல்லைப் பகுதி டிஐஜி கன்வர் விஜய் பிரதாப் சிங்கும் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாக முதலில் கருதப்பட்டது.
ஆனால் தற்போது மேலும் 2 பேர் உள்ளே இருப்பதாக சந்தேகிக்கிறோம். அவர்களது நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. அவர்கள் தரப்பிலி்ருந்து பாதுகாப்புப் படையினரை நோக்கி சுட்டு வருகின்றனர்.
இருப்பினும் இருவரையும் உயிருடன் பிடிக்க வேண்டும் என்று முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்புப் படையினர் முன்னேறி வருகின்றனர் என்றார் சிங்.