மடாதிபதிகளும், துறவிகளும் சமூக மேம்பாட்டுக்காகப் பாடுபடுகிறார்கள்:பிரதமர் மோடி

  • kanapathi
  • மைசூரில் ஸ்ரீஅவதூத தத்தபீடத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவமனை திறப்பு விழாவில் பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசு வழங்கும் ஸ்ரீகணபதி சச்சிதானந்த சுவாமிகள்.

மடாதிபதிகள், துறவிகள், முனிவர்கள் சமுதாயத்தின் மேம்பாட்டுக்காகவே எப்போதும் பாடுபட்டு வருகிறார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இதுகுறித்து மைசூரில் சனிக்கிழமை ஸ்ரீகணபதி சச்சிதானந்த சுவாமிகளின் ஸ்ரீஅவதூத தத்தபீடத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவமனையைத் திறந்துவைத்து அவர் பேசியது: நமது நாடு சமயப் பண்பாளர்களால் நிரம்பியுள்ளது. மடாதிபதிகள், துறவிகள், முனிவர்கள் சமுதாயத்தின் மேம்பாட்டுக்காகவே எப்போதும் பாடுபட்டு வருகிறார்கள். தன்னலம் கருதாத அந்தப் பெருமான்களின் பங்களிப்பு மகத்தானதாகும். தாங்கள் செய்துவரும் சேவையை சத்தமில்லாமல் செய்து வருவதோடு, அவற்றை எப்போதும் தம்பட்டம் அடித்துக்கொண்டு பிரசாரம் தேடிக் கொண்டதில்லை. சமுதாயப் பணியை மடாதிபதிகள், துறவிகள், முனிவர்கள் தங்களது கடமையாகக் கருதுவதால், அதை தம்பட்டம் அடித்துக் கொள்ள விரும்புவதில்லை.

இந்தப் பீடத்துக்கு முதல்முறையாக நான் வருகை தந்திருந்தாலும், இங்கு கடைப்பிடிக்கப்படும் மரபுகளை அறிந்திருக்கிறேன். சமூக சேவையை முதன்மை நோக்கமாக கொண்டு இந்த பீடம் செயல்பட்டு வருகிறது என்பதை நான் அறிவேன். நோய்களைக் குணமாக்கும் திறனை, ஆன்மிக சாதகங்களைப் பெருக்கும் ஆற்றல் படைத்த நமது பண்டைய இசை பாரம்பரியமான ராகராகினி கல்வியை பீடம் போதித்து வருகிறது. இதற்காக உலகின் பல பகுதிகளில் கிளைகள் அமைக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் சுவாமிகள், நோய்களைக் குணமாக்கும் ஆற்றல் படைத்த இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார். இதுதவிர, நாடு முழுவதும் தனது சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அப்பணிகள் அனைத்தும் பாராட்டுக்குரியவையாகும் என்றார் பிரதமர் மோடி. விழாவில், முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஹெலிகாப்டர் தயாரிப்பு மையத்துக்கு இன்று அடிக்கல்

கர்நாடகத்தில் தொழில் முதலீடுகளைப் பெருக்குவதற்கான முயற்சிகளில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. கர்நாடகத்தை விமானவியல் உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கில், பெங்களூரு தேவனஹள்ளி அருகே 1,000 ஏக்கர் பரப்பளவில் விமானத் தொழில் பூங்காவை மாநில அரசு அமைத்துள்ளது.

ரூ.4 ஆயிரம் கோடி முதலீட்டில் அமையவிருக்கும் இந்த மையத்துக்கு கர்நாடக அரசு 610 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது.

பிடரேஹள்ளி காவல் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.3) நடைபெறும் விழாவில், ஹெலிகாப்டர் தயாரிப்பு மையத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

-http://www.dinamani.com

TAGS: