இந்தியாவுக்கான ஆயுதங்களை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும்: மோடி பேச்சு

modi_helicopter_001கர்நாடகா மாநிலத்தில் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பில் உருவாகவுள்ள கிரீன்பீல்டு ஹெலிகாப்டர் திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

கர்நாடகாவில் உள்ள துமாகுரு மாவட்டத்தில் ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பில் கிரீன்பீல்டு ஹெலிகாப்டர் தொழிற்சாலை அமையவுள்ளது.இதன் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது, இந்திய பாதுகாப்புப் படை இந்தியாவுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளது.

அவர்களுக்கு வழங்கப்படும் ஆயுதங்களும், கருவிகளும் உலகிலேயே மிகச்சிறந்தவைகளாக இருக்க வேண்டும் என்பதற்கான நேரம் தற்போது வந்துவிட்டது.

ஆயுதங்களை இறக்குமதி செய்ய நாம் பல ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்கிறோம்.

நமக்கு நவீன ஆயுதங்கள் தேவைப்படுகிறது. ஆனால் இந்த நவீன ஆயுதங்கள் நமக்கு தாமதமாக தான் கிடைக்கின்றன.

இந்த ஆண்டு உற்பத்தி ஆகும் ஆயுதங்கள் நமக்கு அடுத்த ஆண்டு தான் கிடைக்கின்றன.

அடுத்த ஆண்டு உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்கள் அதற்கு அடுத்த ஆண்டு தான் கிடைக்கின்றன.

மேலும், இறக்குமதி செய்யப்படும் ஆயுதங்கள் அதிக விலைமிக்கது. இதற்காக இந்தியா அதிக அளவு நிதியை செலவிட்டு வருகிறது.

ராணுவப்படைகளின் தேவைகளுக்கு ஏற்ப பாதுகாப்புத்துறையில் இந்தியா தன்னிறைவு அடைய வேண்டுமானால் நமக்கு தேவையான நவீன ஆயுதங்களை நாமே உற்பத்தி செய்ய வேண்டும்.

அடுத்த 15 ஆண்டுகளில் 600 ஹெலிகாப்டர்களை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் தயாரிக்கும் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டத்தால் துமாகுரு மாவட்டத்திற்கு மிகபெரிய முதலீடு கிடைத்துள்ளது.

இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும், 4 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகக்கூடும்.

2018-ம் ஆண்டில் இருந்து உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹெலிகாப்டர்கள் பறக்கத்துவங்கும்.

இந்த மாவட்டம் உலக வரைப்படத்தில் முக்கிய இடம் பெறும் என்று கூறியுள்ளார்.

-http://www.newindianews.com

TAGS: