பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானை ஒருபோதும் நம்ப வேண்டாம் என சிவசேனா எச்சரித்துள்ளது.
பதான்கோட் தீவிரவாதத் தாக்குதலுக்கு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் (United Jihad Council-UJC) பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில், சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பதான்கோட் விமானப் படை தளத்தில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல் மூலம் இந்திய எல்லைகள் பாதுகாப்பற்றதாக இருப்பது அம்பலமாகியுள்ளது.
உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய நிலையில் அரசு இருக்கிறது என்பது உறுதியாகியுள்ளது.
எனவே, பிரதமர் மோடி உலக அமைதிக்காக பாடுபடுவதைவிட உள்நாட்டு பாதுகாப்பு மீது கவனம் செலுத்த வேண்டும்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன், மோடி ஒரு கோப்பை தேநீர் அருந்தியதற்கு பதிலடியாக நமது பாதுகாப்பு வீரர்கள் 7 பேர் இன்னுயிரை இழந்துள்ளனர்.
பாகிஸ்தான் இன்று நம்பிக்கை துரோகத்தின் மூலம் தனது நிலையை வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.
ஒருவேளை காங்கிரஸ் ஆட்சியில் இத்தகைய சம்பவம் நடந்திருந்தால் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என பாஜக குரல் எழுப்பியிருக்கும்.
ஆனால், பாஜக இப்போது எந்த மாதிரியான பதிலடியை பாகிஸ்தானுக்கு கொடுத்திருக்கிறது என்பது கேள்விக்குறி.
பதான்கோட் தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்காமல் குடியரசு தின விழாவில் நமது ராணுவ தளவாடங்களை அணிவகுக்கச் செய்து பெருமை கொள்வதில் பயனில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-http://www.newindianews.com