பதான்கோட் விமானப்படைத் தளத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவித் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக இந்திய அரசு அளித்துள்ள ஆதாரங்களைக் கொண்டு விசாரணை நடத்துமாறு பாகிஸ்தானின் உளவுத் துறைக்கு (ஐ.பி) அந்நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, பாகிஸ்தானின் “தி நேஷன்’ நாளிதழில் வெள்ளிக்கிழமை வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
இஸ்லாமாபாதில் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தலைமையில் உயர்நிலைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அதில், நிதியமைச்சர் இஷாக் தார், உள்துறை அமைச்சர் செளதரி நிசார் அலி கான், வெளியுறவுத் துறை ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் நஸீர் கான் ஜன்ஜுவா, வெளியுறவுத் துறை செயலர் ஐஜாஸ் அகமது செளதரி, ஐ.பி. தலைவர் அஃப்தாப் சுல்தான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, “பயங்கரவாதத்தை ஒடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தியாவுக்கு ஒத்துழைப்பு அளிக்க பாகிஸ்தான் தயாராக உள்ளது’ என்று நவாஸ் ஷெரீஃப் கூறினார்.
அதைத் தொடர்ந்து, பதான்கோட் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்தியா அளித்துள்ள ஆதாரங்களை ஐ.பி. தலைவர் அஃப்தாப் சுல்தானிடம் கொடுத்த நவாஸ் ஷெரீஃப், அந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறும் உத்தரவிட்டார்.
இதுதவிர, இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்காக, இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவாலுடன் தொடர்பில் இருக்குமாறு ஜன்ஜுவாவுக்கு ஷெரீப் உத்தரவிட்டார் என்று அந்த நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பதான்கோட் சம்பவம் தொடர்பாக, தொலைபேசி எண்களை மட்டுமே இந்தியா அளித்திருப்பதால், அது விசாரணைக்குப் போதுமானதாக இல்லை.
எனவே, இந்தியாவிடம் இருந்து கூடுதல் விவரங்கள் கோரப்படலாம். அந்தச் சம்பவம் தொடர்பாக, உறுதியான தகவல்கள் இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்; இல்லாவிட்டால் சந்தேகத்துக்குரிய நபர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டு ஜாமீனில் வெளியே வந்துவிடுவார்கள் என்றார் அவர்.
முன்னதாக, பதான்கோட்டில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த பிறகே, அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர முடியும் என்று இந்தியா நிபந்தனை விதித்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
-http://www.dinamani.com