சென்னை: போதையில் 3 போலீசார் ரகளை: பொதுமக்கள் சாலை மறியல்

400 11சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் போதையில் இருந்த 3 போலீசாரை பொதுமக்கள் பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே சாலையோரம் பொதுமக்கள் நடந்து சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனம் ஒன்று தாறுமாறாக வந்துள்ளது. திடீரென்று இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவர்களை விசாரித்தபோது, அவர்கள் தங்களை போலீசார் என்று மிரட்டியுள்ளனர். மேலும், தட்டிக்கேட்டவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது அவர்கள் 3 பேரும் போதையில் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து மற்ற வாகன ஓட்டிகள் போதையில் இருந்த 3 போலீசாரையும் சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலால் கோயம்பேடு 100 அடி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்த கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் தாக்கப்பட்டவர்கள் ஏற்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், போதையில் இருந்த 3 போலீசாரையும் கைது செய்யக்கோரி முழக்கங்கள் எழுப்பினர்.

சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு பொதுமக்களிடம் இருந்து 3 போலீசாரையும் மீட்டு கோயம்பேடு போலீசார் அழைத்துச் சென்றனர். மதுசூதணன், வினோத் உள்பட போதையில் இருந்த 3 போலீசாரிடமும் கோயம்போடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-nakkheeran.in

TAGS: